Skip to main content

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டுவரும் அவசர சட்டம்! தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
high court chennai

 

 

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க,  சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

 

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், அதற்கு தடை விதிக்கக்கோரியும், தமிழகத்தில் உள்ள, நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இரு கூட்டுறவு வங்கிகள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் முதல் முதலாக 1904-ம் ஆண்டு துவங்கப்பட்ட பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி சார்பிலும், வேலூர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், அரசியல் சாசனத்தின்படி, நாடாளுமன்றத்திற்கு இதுசம்பந்தமாக சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த வழக்கை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த அவசர சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் உள்ளது என வாதிட்டார்.

 

ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, நாடு முழுவதும் 1,937 கூட்டுறவு சங்கங்கள், 7.27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கி, வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, வங்கியை ஒழுங்குபடுத்துவதற்காக, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர  மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக வாதிட்டார். இந்த வாதத்தையே மத்திய அரசு தலைமை வழக்கறிஞரும் முன்வைத்தார்.

 

இந்த வழக்கில் இடைக்காலத் தடை கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது. அதன்படி, மத்திய அரசின் அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் ஏதும் இல்லை எனவும், தற்போதைய நிலையில் கூட்டுறவு சங்கங்களின் உரிமைகளில் இந்த அவசர சட்டம் தலையிடுவதாக இருந்தால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக்கூறி,  தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

 

அதேசமயம், கூட்டுறவு சங்கங்களின் உரிமையில் தலையிடுவதாக அவசர சட்டம் இருந்தால், அதுபற்றி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டு,  வழக்கை தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.