Advertisment

எதிர்ப்பு காட்டவேண்டிய தமிழக அரசு உத்தரவு போடுவதா? மத்திய, மாநில அரசுகளுக்கு கி.வீரமணி கண்டனம்

k. veeramani

Advertisment

கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை முடக்கிப்போடும் மத்திய பா.ஜ.க. அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்புகாட்டவேண்டிய தமிழக அரசு உத்தரவு போடுவதா? மக்கள் மன்றத்தில் பதில் சொல்லும் நாள் நெருங்குகிறது என்று திராவிடர் கழகதலைவர் கி. வீரமணி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை வருமாறு:

“மத்தியில் பா.ஜ. கட்சி ஆட்சிவந்ததிலிருந்து மாநில அரசுகளின் உரிமைகள் வேகமாக, ஒவ்வொன்றாகபறிக்கப்பட்டு வருகின்றன. கல்வி, வரி விதிப்பு மற்றும் வசூல் என ஒவ்வொரு நிர்வாக கட்டுப்பாட்டு தளத்திலும் மாநில அரசுகளின் அதிகாரத்தில் படிப்படியாக குறுக்கீடு செய்து அரசமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள மாநில அரசுகளின் அதிகாரத்தையே தட்டிப் பறிக்கின்ற செயல்களை மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுச் செய்து வருகிறது. ‘இந்துத்துவா’ சொல்லும் இந்தியா என்பது ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதை, நடைமுறைப்படுத்துவதற்கு - இந்தியா என்பது ஒரே அரசால் ஆளப்பட வேண்டும்; அது மத்திய அரசாகத்தான் இருக்க முடியும் என்கின்ற வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன; மாநில அரசுகளின் அதிகார வரம்பும். ஆட்சி செய்திடும் தளமும் சுருங்கி வருகின்றன.

வங்கியியல் (Banking) என்பது மத்திய அரசின் அதிகார வரம்பு என அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், கூட்டுறவு வங்கிகள் என்பது மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் வருகின்றன. அரசமைப்புசட்டமும் ‘கூட்டுறவு’ அதிகார வரம்பினை மாநில அரசுபட்டியலில்தான் வகைப்படுத்தியுள்ளது. 1969 ஆம் ஆண்டில் பெரிய வர்த்தக வங்கிகள் நாட்டுடைமையாக்கப்படுவதற்கு முன்பிருந்தே கிராமங்களில், சாதாரண மக்களுக்கு வங்கிச் சேவைகளை அளித்து நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஆக்கமும், வளமும் கூட்டியவை கூட்டுறவு அமைப்புகளான கூட்டுறவு வங்கிகளே! தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடு என்பது வெறும் அதிகாரம் சார்ந்த அமைப்பாக இல்லாமல் மக்கள் இயக்கமாக வளர்ந்ததாகும். பஞ்சாயத்து அதிகாரங்கள் பேரூர், சிற்றூர்களில் பரவலாவதற்கு முன்பிருந்தே மக்கள் நலனில் அக்கறை காட்டி கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வந்துள்ளன. கிராமத்திலும், நகர்புறங்களிலும் மக்களை உறுப்பினர்களாக்கி, அவர்களது பங்கேற்புடன் தலைவர் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருபவை தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகள்.

Advertisment

மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் நிலை என்ன?

ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்த வர்த்தக வங்கிகள் எந்த நோக்கத்திற்காக நாட்டுடைமை ஆக்கப்பட்டனவோ அதிலிருந்து முற்றிலும் விலகி, முழுமையும் நாட்டுடைமை ஆன நிலையிலிருந்து மத்திய அரசின் பங்குகளைத் தளர்த்தி, தனியாருக்குத் தாரை வார்த்து, இன்று பெயரளவில் ‘பொதுத்துறை வங்கிகள்’ என இருந்து வருகின்றன. மத்திய அரசின் பங்குகள் படிப்படியாகக் குறைந்து ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு’ ஆன கதையாக என்றைக்குத் தங்களது நிலைமை (பொதுத்துறை வங்கி எனும் அடையாளம்) மாறி தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்திடப் பயன்படும் வங்கியாக பொதுத்துறை வங்கிகள் சுருங்கி வருகின்றன, சுருக்கப்பட்டும் வருகின்றன.

மத்திய அரசானது தனது அதிகார வரம்பில் உள்ள வங்கித் துறையினைச் சரியாக நிர்வகிக்கும் வல்லமை இல்லாமல் (அரசு நிதித் துறையில் உள்ள அதிகாரிகளெல்லாம் தகுதி, திறமையின் அடிப்படையிலே ஊறிப் போனவர்களாம். சமூகநீதி அடிப்படையில் ‘தகுதி திறமை இல்லாமல்’ இட ஒதுக்கீட்டின் மூலம் உயர்பதவிக்கு வந்தவர்களல்ல என்பது நினைவுப்படுத்த வேண்டியது) பொதுத்துறை வங்கிகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் மக்கள் விரோதப் போக்கை நோக்கிச் செல்லும் நிலையில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அறிவிப்பினை கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.

‘வங்கிகளின் வங்கி’ (Banker’s Bank) ரிசர்வ் வங்கி என்ற அளவில் மாநில அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கூட்டுறவு வங்கிகளை நெறிப்படுத்திடும் (regulation) வகையில் மட்டுமே ரிசர்வ் வங்கியின் பங்கு இருந்து வந்தது. இந்த நெறிப்படுத்திடும் நிலையிலிருந்து மேற்பார்வை (supervision) செய்திடும் கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசு 25.06.2020 அன்று கொண்டு வந்த அவசரச் சட்டத்தின்மூலம் மாநில அரசின் அதிகாரம் தட்டிப்பறிக்கப்பட்டு உள்ளது. பொதுத்துறை வர்த்தக வங்கிகளின் செயல்பாட்டில் எந்த அளவிற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு, அதிகாரம் வைத்துள்ளதோ, அதே அளவிற்கு கூட்டுறவு வங்கிகளின் மீதும் செலுத்துவதற்கான அதிகாரத்தினை அவசரச் சட்டம் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து எழுந்த எதிர்ப்பு பொருட்படுத்தப்படவில்லை?

அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பிருந்தே மாநிலங்களிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சி தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அவைகளை எள்ளளவும் பொருட்படுத்தாது, துச்சமாக நினைத்து, ‘தானடித்த மூப்பாக’ மத்திய பா.ஜ. அரசு அவசரச் சட்டத்தை மிக அவசரமாகக் கொண்டு வந்துள்ளது; நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் நடைபெற முடியாத காலமான கரோனா தொற்றுக் காலத்தில், மக்கள் நலன் காக்க மருத்துவ, சுகாதார வசதிகளைப் பெருக்குவதைவிட மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிப்பதில் அபரிமித அக்கறையினை பா.ஜ. அரசு காட்டி வருவது, ஜனநாயக வழிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானது; வன்மையான கண்டனத்திற்கு உரியது.

மத்திய அரசு கூறும் பொருந்தாத காரணம்:

அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு சொல்லும் காரணமாக - மராட்டிய மாநிலத்தில் மகாராட்டிரா- பஞ்சாப் கூட்டுறவு வங்கியிலும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூர் கூட்டுறவு வங்கியிலும் ஊழல், முறைகேடு நடந்து விட்டது என்பதாகக் கூறுகிறது. நாட்டில் இங்கொன்றும் அங்கொன்றும் முறைகேடு நடந்தால், முறைகேடு நடந்த வங்கிகளின் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு வங்கிகள் முழுவதையும் ரிசர்வ் வங்கி தனது முழுமையான மேற்பார்வைக்குக் கொண்டு வருவது எந்த வகையில் நியாயம்? நோயின் தாக்கம் உள்ளவர்களுக்குத்தான் மருத்துவ சிகிச்சை அளித்திட வேண்டும். ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பது போல உள்ளது மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்ட நடைமுறையாக்கம்.

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் கூட்டுறவு இயக்கம் நீண்ட காலப் பாரம்பரியத்துடன் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்திடவுள்ள கூட்டுறவு வங்கிகளின்மீதான நேரடிக் கட்டுப்பாடு தேவைதானா? வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும், ரிசர்வ் வங்கியின் முழு மேற்பார்வையில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் முறைகேடுகள், ஊழல் நடப்பு இல்லையென்று மத்திய அரசு சொல்ல முன்வருமா? முறைகேடு நடந்தால், இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு நடவடிக்கை எடுத்திட ரிசர்வ் வங்கியால் முடியும் என்றால், முறைகேடு நடைபெற்ற கூட்டுறவு வங்கிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் சரியானதாக இருக்க முடியும். கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முனைவது போல மத்திய அரசு, வடமாநிலங்களில் ஒன்றிரண்டு கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற முறைகேட்டை காரணம் காட்டி, ஒட்டுமொத்த கூட்டுறவு வங்கிகளையும் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் - மாநில அதிகார வரம்பிலிருந்து படிப்படியாக நீக்கிடும் வகையில் - கொண்டு வருவது, அதன் அப்பட்டமான இந்துத்துவா கொள்கையை நடைமுறைப்படுத்திட முனையும் திட்டம் என்பதைவிட மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க முடியாது.

விஷத்தில் தேன் தடவி அளிப்பது போல, கூட்டுறவு வங்கிகள் திவாலானால் அந்த வங்கிகளில் வைப்புத் தொகை செலுத்தியுள்ள வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் கிடைத்திட காப்புறுதி நிறுவனத் திட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் சேர்க்கப்படும் என மத்திய அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. காப்புறுதி என்பது இழப்பு ஏற்படும் நிலையில்தான் பயனளிக்கக் கூடியது. கூட்டுறவு வங்கிகளில் - குறிப்பாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் இழப்பு ஏற்பட வாய்ப்போ,அறிகுறிகளோ அறவே இல்லாத நிலையில், காப்புறுதித் திட்டத்தால் பயன்பெறப்போவது எந்த வங்கியில் டெபாசிட் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களைக் காப்பாற்றிட என்பதை மத்திய அரசு விளக்கிட முன் வருமா?

மத்திய அரசின் அவசரச் சட்ட நடைமுறையால் மக்கள் அல்லல்படுவது ஆரம்பம்:

மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தின் நடைமுறையாக மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘‘இதுவரை கூட்டுறவு வங்கிகள் வழங்கி வரும் நகைக் கடன்களை உடனே நிறுத்திவிட வேண்டும்‘’ - மத்திய அரசிடமிருந்து வந்த இந்த உத்தரவின் விளைவினைச் சற்றும் யோசித்துப் பார்க்காமல், அதே வேகத்தில் தமிழக அரசு - கூட்டுறவுத் துறையின் உயர்நிலையிலிருந்து ‘நகைக்கடன்களை உடனே நிறுத்தவும்‘ என கூட்டுறவு வங்கிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்கு புறம்பான மத்திய அரசின் அவசரச் சட்டம் தன் வேலையை காட்டத் தொடங்கிவிட்டது. அவசரப் பணத்தேவைக்கு வங்கிக்குச் சென்றால், பணத்துடன் திரும்பி வரலாம் என மக்களின் நம்பிக்கைக்கு முற்றிலும் பொருத்தமானது வங்கிகள் வழங்கிவரும் நகைக்கடன் சேவை.

கடன் வழங்கிடும் வங்கிகளுக்கும் (கூட்டுறவு வங்கிகளுக்கும்) மிகவும் பாதுகாப்பானது நகைக் கடன் வழங்குவதே. வங்கிக்கும், சேவை பெறும் வாடிக்கையாளருக்கும் பயனளிக்கும் வகையில் நடைமுறையில் உள்ள நகைக் கடன் வழங்குவதை நிறுத்தி வங்கிகளை வளப்படுத்துவது எந்த வகையிலான நிதித்துறை சீர்திருத்தமோ?

நிதி நிறுவன சேவையின் உயிர்நாடி - நகைக்கடன் வழங்குவதே!

ஏற்கெனவே கிராமப்புறங்களில் பருவகால விவசாய வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில் - நதிநீர் பற்றாக் குறையால் விவசாயத்தை முழுமையாகச் செய்ய முடியுமா என்று தயங்கி நிற்கும் விவசாயிகளுக்குப் பணத் தட்டுப்பாட்டையும் அதிகரித்து - ‘நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்‘ எனும் அபாய அறிவிப்பை மத்திய அரசின் அவசரச் சட்டம் ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசும் மத்திய அரசின் உத்தரவுக்கு ஒத்துப் போய், மாநிலத்து மக்களை அல்லலுக்கு ஆளாக்கியுள்ளது.

மாநில அரசு ‘நகைக்கடன் வழங்குவதை நிறுத்தி விடும்படி’ கூட்டுறவு வங்கிகளுக்கு இட்ட உத்தரவினைத் திரும்பப் பெற வேண்டும். இந்த மக்கள் விரோத உத்தரவுக்கு விதை போடும் வகையில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளித்திருக்கும் அவசரச் சட்டமும் திரும்பப் பெறப்பட வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்குக் கடனை நிறுத்தவில்லை என்று முதலமைச்சர் நேற்று கூறியுள்ளார்; ஆனால், நடைமுறை வேறுவிதமாக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களே வெளிப்படையாகக் கூறியுள்ளதை அலட்சியப்படுத்த முடியுமா?

கரோனா தொற்று தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் முழுக்கவனம் செலுத்திட வேண்டிய மத்திய அரசும், மாநில அரசும் ‘வெந்த புண்ணிலே வேல்’ என்பதைப் போல தங்களது கட்டுப்பாட்டில் அதிகாரம் உள்ளது; உத்தரவு பிறப்பிக்க முடியும் என கருதினால் மக்கள் மன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவீர்கள். மக்கள் மன்றத்தில் நீங்கள் பதில் சொல்லும் நாள் நெருங்கி வருகிறது என்பதை மறந்து விடாதீர்கள்!

செய்த தவறுகளைக் களைந்து, நல்ல நிர்வாக முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்திட முன்வாருங்கள்.

loan Jewel cooperative banks
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe