ADVERTISEMENT

குன்னூர் விபத்து; உதவி எண்கள் அறிவிப்பு

10:38 PM Sep 30, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று இன்று (30-9-2023) மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் கடந்த 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திலிருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காக 54 சுற்றுலாப் பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குறுகிய வளைவில் பேருந்து திரும்பிய போது, நிலைதடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது.

மேலும் பேருந்தில் பயணித்த அனைவரும் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த நித்தின், பேபி கலா, முருகேசன் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவியும் அளித்துள்ளார்.

இந்நிலையில் குன்னூர் சுற்றுலாப் பேருந்து விபத்து தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள், தகவல்கள் தேவைப்பட்டால் 1077, 94437 63207 மற்றும் 04232450034 என்ற உதவி எண்களில் தொடர்பு கொண்டு விபத்து குறித்த தகவல்களைப் பெறலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT