Advertisment

குன்னூர் பேருந்து விபத்து; தலைவர்கள் இரங்கல்

Coonoor bus incident Leaders condolence

Advertisment

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று இன்று (30-9-2023) மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் கடந்த 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திலிருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காக 54 சுற்றுலாப் பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குறுகிய வளைவில் பேருந்து திரும்பிய போது, நிலைதடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும் பேருந்தில் பயணித்த அனைவரும் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த நித்தின், பேபி கலா, முருகேசன் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Coonoor bus incident Leaders condolence

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்குத் தலைவர்கள் பலரும் இரங்கல்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில்,தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவியும் அறிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர்கள் பறிபோனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” எனத்தெரிவித்துள்ளார்.

Coonoor bus incident Leaders condolence

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்” எனத்தெரிவித்துள்ளார்.

தமிழகபாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, “குன்னூர் அருகே, பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்குத்தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத்தெரிவித்துள்ளார்.

bus coonoor nilgiris
இதையும் படியுங்கள்
Subscribe