Skip to main content

குன்னூர் பேருந்து விபத்து; தலைவர்கள் இரங்கல்

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Coonoor bus incident Leaders condolence

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று இன்று (30-9-2023) மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் கடந்த 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திலிருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காக 54 சுற்றுலாப் பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குறுகிய வளைவில் பேருந்து திரும்பிய போது, நிலைதடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும் பேருந்தில் பயணித்த அனைவரும் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இந்த விபத்தில் சிக்கி தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த நித்தின், பேபி கலா, முருகேசன் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Coonoor bus incident Leaders condolence

 

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்குத் தலைவர்கள் பலரும் இரங்கல்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவியும் அறிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர்கள் பறிபோனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Coonoor bus incident Leaders condolence

 

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்”  எனத் தெரிவித்துள்ளார்.

 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “குன்னூர் அருகே, பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்குத் தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.