Skip to main content

குன்னூர் விபத்து- உயிரிழந்தவர்களின் விவரம் வெளியீடு

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Coonoor Accident-Details of Casualties Released

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று நேற்று (30-9-2023) மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. கடந்த 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குறுகிய வளைவில் பேருந்து திரும்பிய போது, நிலைதடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது தெரியவந்துள்ளது. மேலும் பேருந்தில் பயணித்த அனைவரும் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

 

இந்த விபத்தில்  8 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விபத்து குறித்த தகவல்களை பெற 1077, 0423 2450034, 94437 63207 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. விபத்தில் பேபி கலா( 24), மூக்குத்தி (67), கௌசல்யா (29), தங்கம் (40), ஜெயா (50), நித்தி கண்ணன் (15), முருகேசன் (65), இளங்கேஷ் (64) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான அந்த பேருந்தில் குழந்தைகள் உட்பட 59 பயணிகள், இரண்டு ஓட்டுநர்கள் என மொத்தம் 61 பேர் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாநகராட்சி குடிநீர் குழாயில் எலும்புத்துண்டு, இறைச்சி கழிவு; ஆய்வில் ஷாக்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
A piece of bone, meat waste in the municipal drinking water pipe; Shock in the study

குடிநீர் விநியோகம் செய்யும் குழாயிலிருந்து எலும்புத் துண்டுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் வெளியானது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

கோவை மேட்டுப்பாளையம் 21வது வார்டு கொண்டையூர் பகுதி குடியிருப்பில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாகவே தண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்திருந்தனர். எதனால் குடிநீரில் துர்நாற்றம் வருகிறது என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்க கட்டப்பட்ட தொட்டியில் இருந்து கீழே வரும் குடிநீர் குழாய்களை குழி தோண்டி மாநகராட்சி அதிகாரிகள் பார்த்த பொழுது அதில் எலும்பு துண்டுகளும் இறைச்சி கழிவுகளும் வந்தது அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஒருவேளை குடிநீர் தொட்டியில் பறவை ஏதேனும் விழுந்து உயிரிழந்து அதன் எலும்புகள், இறைச்சி கழிவுகள் குழாயில் வெளியேறியதா? அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்ததா என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். மாநகராட்சி குடிநீர் விநியோகத்தில் எலும்புகள் மற்றும் இறைச்சி கழிவுகள் வந்தது 21வது வார்டு கொண்டையூர் பகுதி மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

தூய்மை பணி குறித்து புகார்; வாலிபரைத் தாக்கிய கவுன்சிலரின் கணவர்!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
 Councilor's husband who incident happened the teenager

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 23வது வார்டு கவுன்சிலராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது வார்டின் சில பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர், தூய்மை பணி மேற்கொள்ளாமல் இருப்பது குறித்து கவுன்சிலர் கவிதாவிடம் புகார் செய்துள்ளார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் எல்லை மீறி போனதால், கவிதாவின் கணவர் கவுதமை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ஏரியாவை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று வாலிபர் கவுதம் கூறுகிறார். அதற்கு கவுன்சிலர் கவிதா, ‘அப்படியெல்லாம் செய்ய முடியாது’ என்று கூறுகிறார். அப்போது அந்த வாலிபர், ‘சுத்தமாக வைத்துக்கொள்ள முடியாவிட்டால், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்’ எனக் கூறுகிறார். இப்படி வாக்குவாதம் தொடர்கிறது. அப்போது, அங்கிருந்த பெண் ஒருவர் வாலிபருக்கு ஆதரவாக வர, அவரிடம் கவிதாவின் கணவர், ‘நீ எங்களுக்கு ஓட்டுப்போட்டியா?’எனக் கேள்வி கேட்கிறார். அப்போது வாலிபர் குறுக்கிட, கவிதாவின் கணவர் கவுதமை கண்ணத்தில் அறைந்து தாக்கியதோடு வீடியோ முடிகிறது. 

இந்த தாக்குதல் கழுத்தில் எழும்பு முறிவு ஏற்பட்ட கவுதமை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கவிதாவின் கணவர், வாலிபரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.