Skip to main content

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு நடுவே குளிர வைக்கும் மழை!

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
A cooling rain amidst the scorching sun

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. பல பகுதிகளில் மாலை வேளையில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

மே 17ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில்  தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதேபோல் திருச்சி, நீலகிரி, கரூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் பெய்த கனமழையால் பல்லடம், உடுமலை சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்திராநகர், கிருஷ்ணன்கோவில், ராமச்சந்திராபுரம், மம்சாபுரம் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. சேலத்தில் சேலம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 20 நிமிடம் மிதமான மழை பெய்தது. சேலம் குகை, களரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. நாகல்நகர், பேகம்பூர், ஆர்.எம்.காலனி, ராஜாக்கப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, முருகபவனம் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்து வருகிறது. ஈரோட்டில் பன்னீர்செல்வம், பூங்கா, ரயில் நிலையம், வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது.

சார்ந்த செய்திகள்