convict has escaped from the police in Namakkal

ஈமு கோழி மோசடி வழக்கில் பத்து ஆண்டுகள் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த குற்றவாளியை சேலம் காவல்துறையினர் பிடித்துக் கொடுத்த நிலையில், நாமக்கல் காவல்துறையினர் ஒரே இரவில் அவரை தப்பிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சேலம் அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு, சேலத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் சோதனை நடத்தினர். அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் தங்கியிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர், ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே உள்ள பாப்பிசெட்டிப்பள்ளி ராசன்னப்பள்ளியைச் சேர்ந்த இனோ ஆண்ட்ரூஸ்(41) என்பது தெரிய வந்தது. அவர் மீது நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் ஈமு கோழி மோசடி வழக்கில் கோவை டான்பிட் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3.60 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.

Advertisment

இதையடுத்து இனோ ஆண்ட்ரூஸ் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரை காவல்துறையினர் தேடிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் ஒப்படைத்தனர். அதையடுத்து நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் செல்வகுமார், கேசவன் ஆகியோர் இனோ ஆண்ட்ரூஸை அழைத்துச்சென்று கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஜூன் 30ம் தேதி ஆஜர்படுத்தினர். ஆனால் டான்பிட் நீதிமன்றமோ, அவரை மறுநாள் (ஜூலை 1) காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது. இப்போதே மதியம் ஆகிவிட்டது; இரவு ஒருபொழுதை கழித்தால் காலையில் நேரமாக நீதிமன்றத்தில் கைதியை ஆஜர்படுத்தி விடலாம் எனக்கருதிய காவலர்கள் இனோ ஆண்ட்ரூஸை கோவையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்களுடன் தங்க வைத்துக் கொண்டனர். நள்ளிரவு 1.30 மணியளவில் காவலர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததை அறிந்த இனோ ஆண்ட்ரூஸ், அந்த அறையை விட்டு வெளியே வந்தார். விடுதி அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். காவலர்கள் காலையில் எழுந்து பார்த்தபோது தங்களுடன் படுத்தியிருந்த கைதியைக் காணாமல் திகைத்தனர். கதவை திறக்க முயன்றபோது அது வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதும், இனோ ஆண்ட்ரூஸ் தப்பி ஓடிவிட்டதும் தெரிய வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கோவை விரைந்தனர். காவலர்கள் அறை எடுத்து தங்கிய விடுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதி மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். வழிக்காவலுக்குச் சென்ற காவலர்கள் உண்மையில் அயர்ந்து தூங்கியபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கைதி இனோ ஆண்ட்ரூஸ் தப்பிச்சென்றாரா அல்லது காவலர்களே அவரை தப்பிக்க வைத்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. பணியின்போது அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் நாமக்கல் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.