
சமூக பொறுப்புணர்வு இல்லாமல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவையைச் சேர்ந்த வினோதினி என்கிற தமன்னா என்ற இளம்பெண் ஒருவர் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து சங்ககிரியில் வைத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த சம்பவத்தில் தமன்னா தரப்பில் அது சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்றும் தற்போது தான் திருந்தி விட்டதாகவும், திருமணமாகி ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் மீண்டும் வேறு ஏதோ காரணங்களால் அந்த வீடியோக்கள் வைரலாகி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவில் கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், 'சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களுடன் காட்சிப் பதிவேற்றங்களை செய்வதில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சுய விளம்பரங்களுக்காக பொறுப்பற்ற முறையில் கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக் கொண்டு புகைப்படங்களையும், காட்சிப் பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுதல் சட்டப்படி குற்றம். ஆயுதங்களுடன் காட்சிப் பதிவுகளையும், புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்தால் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கும் அனுப்பப்படுவர். எனவே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் சமூக அக்கறையுடன், சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்' என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.