Skip to main content

அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டம் தொடர்பான சர்ச்சை-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மறுப்பு!

Published on 18/05/2021 | Edited on 19/05/2021

 

 Controversy over meeting with officials - Minister of Education denies!

 

நேற்று காலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தில் கரோனா தொற்றை தடுப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண்,  திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகள் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இது தொடர்பாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 

அதில், ''மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும், மாநகர காவல் ஆணையரும் நான் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து என்னை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக என் அலுவலகத்திற்கு வந்தனர். அந்த நேரத்தில் கரோனா பேரிடரை சமாளிக்கும் பொருட்டு திருச்சியில் செயல்பட்டு வரும் பொது நல சங்கங்களான ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப், யுகா அமைப்பு மற்றும் வாசுகி அறக்கட்டளை ஆகிய நிர்வாகிகளுடன் போதிய உதவிகளை தங்கள் அமைப்பின் சார்பாக மாவட்ட மக்களுக்கு செய்ய வேண்டுமென கோரிக்கையுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அதிகாரிகள் வருகை தந்தனர். கரோனா காலத்தில் மக்கள் உயிரை காக்கின்ற வகையில் சேவை மனப்பான்மை உள்ள ஒற்றைக் கருதுள்ள நபர்கள் சந்திக்கும் ஆலோசனை கூட்டம் என்பதால் அதிகாரிகள் தாங்களும் இந்தக்கூட்டத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மற்றபடி இந்த கூட்டம் திட்டமிட்டு அதிகாரிகளை வரவழைத்து நடைபெற்ற கூட்டம் அல்ல. அதை நடத்துவதற்கு நான் அறிந்த வகையில் அரசு ஊழியர் என்ற முறையில் என்னுடைய அலுவலகத்தில் நடத்த அனுமதியில்லை என்பதை நான் அறிந்தவன். சில பத்திரிககைளில்  செய்தி வந்தவாறு முன்னரே உத்தேசிக்கப்பட்ட கூட்டம் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்