வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலான 'மாண்டஸ்' சென்னையில் இருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர்பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''மகாபலிபுரத்தை ஒட்டி புயலானது கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலோரத்தை ஒட்டி உள்ள மாவட்டங்களில் மழை இருக்கும். பரவலாக தமிழக பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பொழியும். ஒருநாளில் வெவ்வேறு நேரத்தில் புயலின் வேகமானது ஏறி இறங்கும். தற்போதைய நிலவரப்படி தீவிர புயல், புயலாக மாறி கரையைக் கடக்க இருக்கிறது. கரையைக் கடக்கும் பொழுது புயலின்வேகம் 65 லிருந்து 75 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.