/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2452.jpg)
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். தேமுதிகபிரமுகரான இவர், கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - தேமுதிக கூட்டணியில் கடலூர் தொகுதிவேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது தந்தை ராஜகோபாலன் நெய்வேலி மந்தாரக்குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு சிட் ஃபண்ட்ஸ் நிதி நிறுவனத்தைத் தொடங்கி, இதன் கிளைகள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் இவரின் பள்ளிகளும் இயங்குகின்றன.
இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை, நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களையும் வெளியே விடவில்லை. அவர்களின் செல்ஃபோன்களை வாங்கிக்கொண்ட அதிகாரிகள், அலுவலக தொலைபேசி எண்ணையும் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். மேலும், நிறுவனத்தின் அருகிலேயே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வீடும் உள்ளது. அங்கும் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நெருங்கிய நண்பர்கள், பங்குதாரர்கள் உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_631.jpg)
இதேபோல் விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பள்ளி இயங்கிவருகிறது. அங்கும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் வேப்பூர் அருகே உள்ள திருப்பெயரில் இயங்கும் பள்ளி, கோபாலபுரம் பகுதியில் இயங்கும் பள்ளி என கடலூர், நெய்வேலி, வடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பகுதிகளில் இயங்கும் பள்ளிகள், திரையரங்குகள், தங்கும் விடுதிகள், அலுவலகங்கள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் 2 நாட்களாக சோதனை நடைபெற்றது. 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றுவருவதாக வருமானவரித்துறையினர் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இன்றும் மூன்றாவது நாளாக ஜெய்சங்கர் வீட்டில் சோதனை நடத்திவரும் வருமான வரித்துறையினர், ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மூன்று நாட்களாக இந்தப் பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டதால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)