Continuous heavy rain; Holiday notification for schools and colleges

வடகிழக்குப்பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

Advertisment

அதன்படி தற்போது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாகத் தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாக 4 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (18.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்விடுத்துள்ளனர். மேலும் திருநெல்வேலியில் அமைந்துள்ளமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (18.12.2023) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.