ADVERTISEMENT

தொடரும் சிலைகள் உடைப்பு சம்பவம்... தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!

12:02 PM Nov 10, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெரியசாமி மலை அடிவாரத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பெரியசாமி, செங்கமலையார் கோவில்கள் பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவிலுடன் இணைந்த காட்டுக்கோவில்கள் ஆகும். கடந்த மாதம் 6ஆம் தேதி பெரியசாமி கோவிலில் 10 அடி உயரம் கொண்ட பெரியசாமி சிலை உள்பட 9 சிலைகளும், செங்கமலையார் கோவிலில் கன்னிமார்கள் சிலை உள்பட 5 சிலைகளும் என மொத்தம் 14 சிலைகள் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.

இதையடுத்து 7ஆம் தேதியும் 13 கற்சிலைகளை மர்ம நபர்கள் உடைத்தனர். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள சித்தர் கோவிலில் மயில் சிலையை உடைத்து சேதப்படுத்தியதாக சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணனின் மகன் நாதன் (37) என்பவரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட நாதன், உணவு சாப்பிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. மேலும், கடந்த 27ஆம் தேதி பெரியசாமி கோவிலில் 18 சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.

இந்நிலையில், பெரியசாமி கோவிலில் நேற்று முன்தினம் (08.11.2021) நள்ளிரவு 15 அடி உயரம் கொண்ட குதிரை சிலை, ஆத்தடி சித்தர் கோவிலில் 3 அடி உயரமுள்ள நாக கன்னி சிலை, பெருமாள் கோவிலில் 5 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை, செங்கமலையார் கோவிலில் 15 அடி உயரமுள்ள பொன்னுசாமி சிலை உள்பட சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மொத்தம் 9 சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிறுவாச்சூரில் தொடர்ந்து சிலைகள் உடைப்பு சம்பவங்கள் நடந்துவருவதால் புலன்விசாரணை செய்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT