
திருவாரூர் அருகே பூட்டியிருந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, 219 பவுன் நகை 7 லட்ச ரூபாய் ரொக்கம் என பலே கொள்ளை நடந்துள்ளது. இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ஜவகர் தெருவைச் சேர்ந்தவர் யூசுப்தின் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் நேற்று மாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 219 பவுன் நகை, 7 இலட்சம் ரொக்கம் என மொத்த பொருட்களும் கொள்ளை போயிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த யூசுப்தின் உடனடியாக கொரடாச்சேரி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
அந்த வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பீரோவில் பதிவாகியிருந்த கைரேகை உள்ளிட்ட பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரோனா ஊரடங்கால் கொள்ளை சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் வீடுகளில் கொள்ளை போகும் சம்பவங்கள் துவங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெருத்த வேதனையை உண்டாக்கியிருக்கிறது.