கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
முதலில் காவல்துறை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுக்கு மேல் ஆகியும் முதல் தகவல் அறிக்கை மட்டுமே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படமால் இருந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 16ம்தேதியில் இருந்துமொத்தம் 737 நாட்களாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி மொத்தமாக இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும், 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும், அறிவியல் பூர்வமான முறையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதே சமயம் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று (24/01/2025) இதில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மூன்று பேர் மீது புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் 750 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த வேங்கை வயல் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதில் முரளிராஜா வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். சிபிசிஐடி போலீசாரும் அவரை விசாரித்திருந்தனர். முரளி ராஜாவுக்கு குரல் மாதிரி பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய இரண்டு இளைஞர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று பேரிடமும் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அறிவியல் பூர்வமான சாட்சிகள் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இவர்கள் இதில் ஈடுபட்ட நபர்களாக கருதியுள்ளனர்.
இந்நிலையில் வேங்கைவயல் சம்பவம் தொடர்பான வீடியோ, ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் இளைஞர்கள் பாலிதீன் கவரில் மனிதக் கழிவுகளை கொண்டு வந்து நீர்தேக்க தொட்டியில் சிரித்து பேசிக்கொண்டே அச்செயலில் மிகவும் சாதாரணமாக ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் சுதர்சன் என்ற நபர் தன்னுடைய தாயிடனும், அத்தையுடனும் இது தொடர்பாக பேசும் ஆடியோவும் வெளியாகியுள்ளது.
வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் அனைத்தும் குற்றம்செய்யப்பட்ட நபர்களால் அழிக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப உதவியுடன் மீட்டதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதர்சன் அவருடைய அம்மாவுடன் பேசும் ஆடியோவில்
'அம்மா: என்னாச்சு... பிரச்சனை என்ன ஆச்சு?
சுதர்சன்:முரளி அண்ணன் மேல தான் டவுட்டுபட்டு அவரை இது பண்ண பார்த்தார்கள். நேத்துதான் நிறைய பேர் வந்தவுடன் ஃப்ரீயா விட்டு விட்டார்கள்
அம்மா: வேற எதுவும் பண்ணிட மாட்டாங்களே?
சுதர்சன்: எதுவும் பண்ண மாட்டாங்க . அதான் அந்த அண்ணனும் பயந்துகிட்டு இருக்கிறார்.
அம்மா: ஐயோ சொல்லாமல் இருந்திருக்கலாம். நீங்க நிதானமா பதில் சொல்லுங்க. ஒத்துக்கவே கூடாது' என பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வழக்கில் முன்னதாக சிபிசிஐடி போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவரும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில்வேங்கை வயலை சுற்றியுள்ள சோதனை சாவடிகளில் போலீசார்பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி விசிகவினர் சிபிஐ விசாரணை வேண்டும் எனபோராட்டங்களில் ஈடுபடலாம் என்பதன் அடிப்படையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.