Continued inspections in firecracker shops

சங்கராபுரத்தில் கடந்த 26ம் தேதி இரவு 7 மணி அளவில் செல்வகணபதி என்பவரது பட்டாசு குடோனில் விபத்துஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், நான்கு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது, 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டு இரவு பகல் பாராமல் ஆய்வுப் பணிகளைச் செய்ய அரசு முடுக்கிவிட்டுள்ளது. பல்வேறு ஊர்களில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisment

விபத்து நடந்த சங்கராபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நகராட்சிக்குச் சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு கடைகளைச் செல்வகணபதி வாடகைக்கு எடுத்து அதில் பட்டாசுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, டிஎஸ்பி கங்காதரன், தாசில்தார் பாண்டியன், இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலர்கள் அந்தக் கடைகளின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். அதில் வைக்கப்பட்டிருந்த 8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குளத்து மேட்டுத்தெருவில் வெங்கடேசன், கடை வீதியைச் சேர்ந்த ரவி,குப்புசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அங்கு போதிய பாதுகாப்பு இன்றி அளவுக்கதிகமான பட்டாசுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

 Continued inspections in firecracker shops

சங்கராபுரம் அருகில் உள்ள தேவபாண்டலம் கந்தசாமி என்பவரது பெட்டிக் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசு போலீசார் பறிமுதல் செய்து பெட்டிக் கடை உரிமையாளர் கந்தசாமியைக் கைது செய்தனர். இதுபோன்று சங்கராபுரம் நகரில் அளவுக்கதிகமான பட்டாசு வைத்திருந்த கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. பட்டாசு விற்பனை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் பட்டாசு விற்பனை செய்யப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். விதிமுறைகளை மீறி பட்டாசுக் கடைகளை நடத்துவோர், அவற்றைப் பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.