Continued heavy rain; Submerged samba crops

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று (26-11-24) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (27-11-24) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்பதால், சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பொழிந்து வருகிறது. தேரடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதேபோல திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருகிறது.

Advertisment

தஞ்சை மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக சில இடங்களில் மழை நீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே இருக்கக்கூடிய புத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுமார் 200 ஏக்கர் அளவிலான பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.