Skip to main content

தொடரும் கனமழை-தேர்வுகள் ஒத்திவைப்பு

Published on 01/12/2024 | Edited on 02/12/2024
Continued heavy rain-exams postponed

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்கத் துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்துள்ளது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரியில் 46 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதுவே இதுவரை பதிவான மழையின் அளவுகளின் தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாகும். இந்நிலையில் புதுச்சேரியில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது வரை ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் நான்கு பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை நாகை ஆகிய 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் நாளை (02/12/2024) கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ராணிப்பேட்டையில் நாளை (0212/2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். அதேபோல் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்