
“திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையின் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 9 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர் பாதிப்புக்குள்ளாகியுள்ளது” என வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்குப் பின்பு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர் கமலாலயகுளம், புதிய பேருந்து நிலையம், சமீபத்தில் உடைப்பெடுத்த வெட்டாறு படுகை உள்ளிட்ட பல பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
அதன் பின் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (09.11.2021) மாலை, வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கிர்லோஷ் குமார் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், செய்தியாளர்களைச் சந்தித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், “திருவாரூர் மாவட்டத்தில் 212 பகுதிகள் மழையினால் பாதிப்படையக்கூடிய பகுதிகளாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை பெய்த மழையில் 168 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. ஒரு வீடு முழுவதும் இடிந்து விழுந்துள்ளது. இதற்குரிய நிவாரணப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
மேலும், தொடர் மழையின் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். அதேபோல 11 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கால்நடைகள் அனைத்தும் மழை பாதிப்பு காரணமாகத்தான் உயிரிழந்ததா என பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் தெரியவரும். தொடர் மழையினால் சம்பா நெற்பயிர் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை இணைந்து கணக்கெடுக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பேரிடர் காலத்தில் பொதுமக்களைப் பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு ஏதுவாக 249 பாதுகாப்பு மையங்கள் தேர்வு செய்து தயார் நிலையில் உள்ளன" என தெரிவித்தார்.