/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1735.jpg)
சென்னை திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, அழகர்கோயில், திருப்பரங்குன்றம் மற்றும் இராமேசுவரம் ஆகிய 5 கோயில்களுக்கும் வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் துவங்கிவைக்கப்பட்டது.
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நடைபெற்ற துவக்க விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு துவக்கிவைத்தார். அதேபோல், மற்ற நான்கு கோயில்களுக்கும் சென்னையில் இருந்தபடியே காணொளி காட்சி வாயிலாக இந்தத் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு துவக்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு (பணிகள்) தலைவர் என்.சிற்றரசு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4489.jpg)
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம், சிதம்பரம் கோவில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “கனகசபை மீது பக்தர்கள் நின்று தரிசனம் செய்ய நீதிமன்றத்தில் தடையாணை கேட்டார்கள். நீதிமன்றம் தடை எதுவும் பிறப்பிக்கவில்லை. தற்போது ஆருத்ரா தரிசனத்தை காரணம் காட்டி அவர்களைத் தவிர வேறு யாரும் கனகசபையில் ஏறுவதற்கு தடை செய்து வருகிறார்கள்.
மோதல் போக்கு வேண்டாம் என்பதற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். கனகசபையில் பக்தர்களை அனுமதிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இது குறித்து நீதிபதிகள் முன்பு தெரிவிக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)