Container floating in the Kumari Sea rescued

Advertisment

கேரளா மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சியை நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தது. ரசாயனங்களை கொண்ட கன்டெய்னர்களை ஏற்றிச் சென்ற கப்பல், வேகமாக வீசிய காற்றால் கொச்சி அருகே நடுக்கடலில் திடீரென்று கவிழ்ந்தது. இதில், ரசாயனம் இருந்த கண்டெய்னர்களும் கடலுக்குள் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தொடர் மீட்பு பணியில் கப்பலில் இருந்த மாலுமிகள் உள்பட 24 பேர் காப்பாற்றப்பட்டனர்.

அதே சமயம் இந்த சரக்கு கப்பலில் இருந்த 640 கண்டெய்னர்களில், 13 கண்டெய்னர்களில் மிகவும் ஆபத்தான நச்சுத்தன்மை கொண்ட ரசாயணம் இருந்ததால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அந்த ரசாயணம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதி என அறிவிக்கப்பட்டது. மேலும், 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு வேதிப்பொருள் இருப்பதாகவும், இந்த கால்சியம் கார்பைடு உப்புத் தண்ணீரில் கலந்தால் ஆக்ட்லைன் (acetylene) என்ற வாயுவை உருவாக்கி தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கடலோர பகுதி மக்களுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மற்றொரு புறம் கப்பல் முழுவதும் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 100 கண்டெய்னர்கள் வரை கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், கடலில் கொட்டிய எரிபொருள் மற்றும் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் கடலோர காவல் படையில் ஈடுபட்டு வருகின்றனர். ரசாயனப் பொருட்கள் கடலில் பரவி வரும் நிலையில், இதனை கேரளா அரசு பேரிடராக அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி கடல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்டெய்னர் ஒன்று கரை ஒதுங்கியது. இந்த கண்டெய்னரை மீட்கும் முயற்சியில் மீன்வளத்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் கடந்த 2 நாட்களாகப் போராடி வந்தனர். பல கனரக வாகனங்கள் கொண்டு கண்டெய்னரை கரைக்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்நிலையில் கண்டெய்னர் இன்று (01.06.2025) கரைக்கு ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த கண்டெய்னரை லாரியில் ஏற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கண்டெய்னர் திறந்து அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பின்னர் இது குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் கடந்த 2 நாட்களாகக் கடலில் மிதந்த கண்டெய்னர் மீட்கப்பட்ட தகவல் மீனவர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.