
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரம் கொடிக்கட்டி பறக்கிறது. நகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து அவர்களைக் கஞ்சா போதையில் கிறங்க வைத்து, பின்னர் அவர்களையே கஞ்சா வியாபாரத்திற்கும், கஞ்சா கடத்தவும் பயன்படுத்திவருகின்றனர்.
கஞ்சா போதை கிறக்கத்தில் இருந்த சில பள்ளி மாணவர்கள் கொடைக்கானல் வரை கஞ்சா கடத்திச் சென்று கொடுத்தால் ரூ.10 ஆயிரம் வரை தருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. கடத்தலுக்காக அதிக விலைகொண்ட பைக்குகளைத் திருடிக்கொள்வதும் வழக்கம். இதில் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் 2 பேர், விபத்தில் இறந்தும் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கறம்பக்குடியில் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு, சி.சி.டி.வி.யில சிக்கிய 2 பேர் சிறைக்குச் சென்றுள்ளனர். இப்படி பல சம்பவங்கள் நடந்தாலும் கூட புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் கஞ்சா விற்பனை குறையவில்லை.
இந்நிலையில்தான் புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனையைக் கண்டறிய அமைக்கப்பட்ட சிறப்பு பிரிவு போலீசார், புதுக்கோட்டை நகரில் கைது செய்யப்பட்ட வினோத் மற்றும் ஐயப்பன் ஆகியோரின் செல்ஃபோன் எண்களை ஆய்வு செய்தபோது போலீசாருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இந்தக் கஞ்சா வியாபாரிகளின் செல்ஃபோன்களில் இருந்து புதுக்கோட்டை நகர காவல் நிலைய எஸ்.ஐ. சந்திரசேகர் மற்றும் திருப்புனவாசல் காவல் நிலைய தலைமை காவலர் முத்துக்குமார் ஆகியோருக்கு அதிகமான அழைப்புகள் சென்றுள்ளது. இந்த தகவல் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணா சுந்தருக்கு தெரியப்படுத்திய நிலையில், கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்திரசேகர் எஸ்.ஐ., ஏட்டு முத்துக்குமார் ஆகியோரைப் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.