“எம்.சாண்ட், ஜல்லி  விலை உயர்வால் கட்டுமானப் பணி பாதிப்பு” - ராமதாஸ் 

Construction work affected by rise in M.Sand and gravel prices says Ramadoss

தமிழ்நாட்டில் கனிமங்களுக்கு உயர்த்தப்பட்ட ராயல்டியை குறைக்கவும், புதிதாக விதிக்கப்பட்ட சிறு கனிம நில வரி விதிப்பை கைவிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் - தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் இன்று முதல் உயர்த்தப் பட்டுள்ளன. ஒரு யூனிட் ஜல்லி விலை ரூ. 4 ஆயிரத்திலிருந்து, ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வுக்குக் காரணம் தமிழக அரசின் தவறான கொள்கை தான்.

தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு கன மீட்டருக்கு ரூ.90 என்ற அளவில் விதிக்கப்பட்டு வந்த ராயல்டி, இப்போது டன் என்ற புதிய அளவில் விதிக்கப்படுவதால் ஒரு கனமீட்டர் கருங்கல்லுக்கு இதுவரை ரூ.90 என்ற அளவில் வசூலிக்கப்பட்டு வந்த ராயல்டி, இப்போது ரூ.165 ஆக உயர்ந்து விட்டது. அதை மீண்டும் ரூ.90 ஆக குறைப்பதுடன், புதிதாக ஒரு டன்னுக்கு ரூ.90 என்ற விகிதத்தில் விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நிலவரியையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கல் குவாரிகள், கிரஷர்கள் மற்றும் சரக்குந்து உரிமையாளர்கள் கடந்த 16-ஆம் தேதி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வந்தனர்.

அவர்களின் கோரிக்கைகள் குறித்து இரு முறை பேச்சு நடத்திய தமிழக அரசு, கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று கூறி விட்டது. அதற்கு பதிலாக ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொள்வதற்கு கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கு இதுதான் காரணம் ஆகும்.

கட்டுமானப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே மிகவும் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனால், கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் கட்டுமானப் பொருள்களின் விலை 25% வரை உயர்த்தப்பட்டிருப்பதால் கட்டுமானப் பணிகள் மேலும் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், கட்டுமானத் தொழிலாளர்களும் வேலை இழக்கக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது.

எனவே, தமிழ்நாட்டில் கனிமங்களுக்கு உயர்த்தப்பட்ட ராயல்டியை குறைக்கவும், புதிதாக விதிக்கப்பட்ட சிறு கனிம நில வரி விதிப்பை கைவிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைகள் குறைவதற்கு தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Ramadoss tngovt
இதையும் படியுங்கள்
Subscribe