









தமிழக தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், ''இப்பொழுது இருக்கிற 543 நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்தால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் நம்முடைய தொகுதியின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு மொத்தமாக எட்டு மக்களவை இடங்களை இழக்கும் என சொல்கிறார்கள். அதாவது இனி 39 எம்பிக்கள் கிடைக்க மாட்டார்கள். நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 748 உயர்த்தப்பட்டு புதிய விகிதாச்சாரத்தின் படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போதைய மக்கள் தொகையின் படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் 12 கூடுதல் தொகுதிகளை நாம் இழக்க நேரிடும். இந்த இரண்டு முறைகளிலும் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து அதிகமாக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்கள் உடைய எண்ணிக்கை பற்றிய கவலை அல்ல, நம் தமிழ்நாட்டின் உரிமைச் சார்ந்த கவலை. நம் தமிழ்நாடு எதிர்கொள்ளக் கூடிய முக்கியமான பிரச்சினையில் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் எல்லோர் முன்பும் வைக்கிறேன்.
தமிழ்நாட்டினுடைய உரிமை; கூட்டாட்சி கருத்துகளின் கோட்பாடு; தமிழ்நாடு மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக்கப்படக் கூடாது என்பதை தீர்க்கமாக திடமாக நாம் வலியுறுத்தி இருக்கிறோம். இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கே அபாயமான செயல். இதில் நமக்குள் கருத்து மாறுபாடு இருக்காது என நான் நினைக்கிறேன். இருக்கக் கூடாது என்றும் விரும்புகிறேன். இந்திய நாட்டினுடைய கூட்டாட்சி அமைப்புக்கும், தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் அச்சுறுத்தலை இது ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கின்ற அரசியல் பிரதிநிதித்துவம் மீதான நேரடி தாக்குதல். இப்படி ஒரு சமூக நீதி அற்ற, அநீதியான மறு சீரமைப்பு அமல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் குரல் நெறிக்கப்படும்'' என தெரிவித்து மறுசீரமைப்பிற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
முதல்வரின் தீர்மானத்தை வழிமொழிந்து அரசியல் கட்சியினர் தங்கள் கருத்துக்களை கூட்டத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அப்படி அரசியல் கட்சிகளால் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கருத்துகள் :
தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது. தமிழக அரசின் தீர்மானத்தை முழுமையாக அதிமுக ஆதரிப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயக்குமார் பதிவு செய்துள்ளார்.
'கொள்கை முரண்களை ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக கூடியிருக்கிறோம். கலந்து கொண்டுள்ள கட்சிகளுக்கு பாராட்டுகள். இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றாதீர்கள்' என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.
'தென் மாநில எம்பிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை விசிக வரவேற்கிறது. தற்பொழுதுள்ள தொகுதி எண்ணிக்கையை மாற்ற வேண்டாம் என வலியுறுத்துவோம்' என விசிக தலைவர் திருமாவளவன் பதிவு செய்துள்ளார்.
'மிகச் சிறப்பான கூட்டம் இது. தேமுதிக முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது' என தேமுதிக தெரிவித்துள்ளது.
'தொகுதி மறுசீரமைப்பு ஒரு கட்சியின் பிரச்சனை அல்ல மாநிலத்தின் பிரச்சனை' என திராவிட கழகத்தின் கீ.வீரமணி பதிவு செய்துள்ளார்.
'இந்த கூட்டம் அவசியமானது; காரணம் தமிழகத்திற்கு தொகுதிகள் குறையாது என தெரிவித்துள்ள அமித்ஷா, உத்தரப்பிரதேசத்திற்கு எவ்வளவு தொகுதிகள் அதிகரிக்கும் என சொல்லவில்லை' என பாமகவின் அன்புமணி பதிவு செய்துள்ளார்.
'தமிழ்நாடு தொகுதி வரையறைக்கு எதிராக இல்லை; தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிப்படையாமல் மறுவரையறையை நேர்மையாக, வெளிப்படையாகச் செய்ய வேண்டும்' என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு செய்துள்ளார்.
'தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் உச்சிமாநாட்டை முதலமைச்சர் நடத்த வேண்டும். ஒருநாள் பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்' என தமிமுன் அன்சாரி பதிவு செய்துள்ளார்.
'முதலமைச்சரின் கோரிக்கைளை முழுமையாக ஏற்று உங்களுடன் இணைந்து போராடுவோம்' என ஜான் பாண்டியன் பதிவு செய்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முறையாக திமுக தலைமையிலான அரசு குரல் கொடுத்திருக்கிறது.'ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக திரண்டுள்ளனர். நிதானமும் தெளிவும் கொண்ட முதலமைச்சர் அவர்களால் மட்டும்தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். எனவே நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் எங்கள் ஆதரவு உண்டு' என கொங்கு இளைஞர் கட்சி தலைவர் உ.தனியரசு தெரிவித்துள்ளார்.
'தென்னிந்தியாவில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் மறுசீரமைப்பு நியாயமாக இருக்காது. தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. தற்பொழுது எண்ணிக்கையே தொடர வேண்டும்' என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் பதிவு செய்துள்ளார்.
மொத்தம் 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர், புதிய தமிழகம் உள்ளிட்ட 5 கட்சிகள் இக்கூட்டத்தை புறக்கணித்து பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.