Skip to main content

மாணவிகள் வழக்கில் ஆதாரங்களை அழிக்க சதி - ஆளுனர் துணை போகக் கூடாது! ராமதாஸ்

Published on 18/04/2018 | Edited on 18/04/2018


 

governor banwarilal purohit

 

பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்விப்பதற்காக சில மாணவிகளுக்கு வலைவீசப்பட்டது தொடர்பான விவகாரத்தில் தமிழக ஆளுனர் பன்வரிலால் புரோகித் நேற்று நடத்திய  செய்தியாளர்கள் சந்திப்பும், அதில் அவர் அளித்த விளக்கங்களும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு மாறாக அதிகரித்துள்ளன. எந்த வகையிலும் அதிகாரமற்ற விஷயத்தில் ஆளுனர் தலையிடுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

பாலியல் வலை விவகாரத்தில் ஆளுனர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு முற்றிலும் தேவையற்றது. தமிழகத்தை உலுக்கிய இந்த விவகாரத்தில் முக்கியக் குற்றவாளிகள் யார்? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். அதற்காக நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று  தான் நானும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகிறோம். இந்த விவகாரத்தில் பயனாளி ஆளுனர் தான் என்று எந்த தலைவரும் குற்றஞ்சாற்றவில்லை. இத்தகைய சூழலில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட வினாவை எளிதாக கடந்து போயிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல்,‘‘எனக்கு 78 வயதாகிவிட்டது. எனக்கு பெயரன், பெயர்த்திகள் மட்டுமின்றி, கொள்ளுப் பெயரன்களும் உள்ளனர்’’ என்று பதிலளித்து சுயபச்சாதாபம்  தேடும் முயற்சியில் ஆளுனர் ஈடுபட்டது, எதற்காக இந்த நாடகம்? என்ற ஐயத்தை  தான் அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழ்நாடு ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. பெரும்பான்மை வலிமை இல்லாத அரசு ஆட்சியில் தொடர்கிறது; பினாமி அரசு மீது 24 ஊழல் குற்றச்சாற்றுகள் அடங்கிய 206 பக்கங்கள் கொண்ட புகார் பட்டியலை கடந்த திசம்பர் மாதம் 9-ஆம் தேதி பா.ம.க. வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது; காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகங்களைக் கண்டித்து வரலாறு காணாத போராட்டங்களை தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. இதுகுறித்தெல்லாம் விளக்குவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாத ஆளுனர், மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய பெரிய மனிதர்கள் யார்? என்ற சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கமளிக்க வேண்டிய தேவை என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
 

ஏற்கனவே நான் கூறியதைப் போன்று இந்த விஷயத்தில் ஆளுனர் தலையிட முடியாது. ஏனெனில், இது பல்கலைக்கழகம் சார்ந்த விஷயமல்ல. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 4 மாணவிகளை அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள சிலருக்கு பலியாக்க முயன்ற, மன்னிக்கவே முடியாத குற்றம் சார்ந்த விஷயமாகும். இது ஒரு தனியார் தன்னாட்சி கல்லூரியின் மாணவிகளை சீரழிக்க அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நடத்திய நாடகம். இதற்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனியார் கல்லூரிகளின்  இணைப்பு அங்கீகாரம், தேர்வு மதிப்பீடு ஆகியவற்றில் மட்டும் தான் பல்கலைக்கழகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும். மாறாக, இதுபோன்ற குற்றவியல் நிகழ்வுகளில் தலையிட பல்கலைக்கழக துணைவேந்தருக்கோ, வேந்தரான ஆளுனருக்கோ எந்த அதிகாரமும் இல்லை. ஒருவேளை பல்கலைக்கழக வளாகத்திலேயே இத்தகைய பாலியல் சுரண்டல் நடந்திருந்தால் கூட, அது தொடர்பாக பல்கலைக்கழகம்  எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. புலனாய்வு அமைப்புகள் தான் இக்குற்றத்தை விசாரிக்க முடியும்.
 

அதுமட்டுமின்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர்பதவிகளில் உள்ள சிலர் அல்லது அவர்களின் அதிகார மற்றும் பதவித் தேவைகளை நிறைவேற்றும் நிலையில் உள்ளவர்களுக்காகத் தான் அப்பாவி மாணவிகளை வேட்டையாட முயற்சிகள் நடந்துள்ளன. அதுமட்டுமின்றி, தங்களையே இழக்க முன்வரும் மாணவிகளுக்கு காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று நிர்மலா தேவி ஆடியோ பதிவில் கூறியுள்ள நிலையில், இதன் பின்னணியில் பல்கலைக்கழகம் தான் இருக்கிறது  என்பது தெளிவாகிறது. அந்த வகையில் பல்கலைக்கழக உயரதிகாரிகள், துணைவேந்தர், வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுனர் ஆகியோர் தான் பாலியல் சுரண்டல் குற்றச்சாற்றுகளை எதிர்கொள்ள வேண்டும். ஆனால், காமராசர் பல்கலைக்கழக வேந்தர் பன்வரிலால் புரோகித், துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா ஆகியோர் நீதிபதிகளாக செயல்பட்டு விசாரணைக்கு ஆணையிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இது சட்டத்தையும், நீதியையும் கொச்சைப்படுத்தும் செயலாகவே அமையும்.

 

ramadoss


 

கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடமிருந்து 3 செல்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து பல்வேறு பெரிய மனிதர்களை தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களும், 60-க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல பெரிய மனிதர்களின் பெயர்களை பட்டியலிட்ட நிர்மலா தேவி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு துணிச்சல் உண்டா? என்று சவால் விடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து தான் நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.  இது குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியே தவிர, அவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கை அல்ல.
 

இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு அம்சம் துணைவேந்தர் முதல் ஆளுனர் வரை அனைவருமே, இந்த அவலச் செயலை நிர்மலாதேவி மட்டுமே செய்ததாகவும், அதில் வேறு யாருக்கும் சம்பந்தமில்லை என்பது போன்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இது உண்மை அல்ல. காமராசர் பல்கலைக்கழகத்தின் உயர்பதவியில் உள்ள ஒருவர் இந்த விஷயத்தில் மோசமானவர் என்று பல்கலைக்கழக பேராசிரியர்களே குற்றஞ்சாற்றுகின்றனர். உண்மை அவ்வாறு இருக்கும்போது நிர்மலா தேவியை பலிகடாவாக்கி விட்டு, அதிகார உச்சியில் உள்ள பெரிய மனிதர்களைக் காப்பாற்றும் சதி தான் இதுவாகும். இந்த சதித்திட்டத்தில் நிர்மலாதேவியின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம்.
 

கல்வி கற்பதற்காக வந்த மாணவிகளை காமத்திற்காக பயன்படுத்திக் கொள்ள துடித்த காட்டுமிராண்டிகள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்காமல் தப்பவிடக்கூடாது.  இவ்விஷயத்தில் தம்மீது தவறு இல்லையெனில் அதை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் தான் ஆளுனர் ஈடுபட வேண்டுமே தவிர, இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. இந்த வழக்கில் பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர் எந்த வகையிலும் தலையிடக்கூடாது. மாறாக இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியரசுத் தலைவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

GOVERNOR BANWARILAL PUROHIT MEET PRESIDENT AT DELHI


தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமான சண்டிகரின் நிர்வாகப் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தலைநகர் டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

 

அதன் தொடர்ச்சியாக, இன்று (08/09/2021) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு, சண்டிகர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. 

 

 

Next Story

சுதந்திர தின விழா- தமிழ்நாடு ஆளுநர் தேநீர் விருந்து!

Published on 15/08/2021 | Edited on 15/08/2021

75 வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று (15/08/2021) மாலை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்றக் குழு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "மாநில அரசின் நடவடிக்கைகளால் பல துறைகளில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. கடின உழைப்பும், வெளிப்படைத்தன்மைக் கொண்ட ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முதலமைச்சருக்கு பாராட்டுகள்" எனத் தெரிவித்தார். 

 

இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குறள் பன்னாட்டு பதிப்பு புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.