Skip to main content

குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Congressmen besieged Khushbu's house

 

நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் , நடிகை த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

அந்த வகையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். எக்ஸ் தளத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்புவை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் மணிப்பூருக்கு வரவில்லை எனக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.

 

அதற்கு பதிலளித்த குஷ்பு, “உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது” எனக் குறிப்பிட்டு விளக்கமளித்திருந்தார். சேரி மொழி என அவர் பயன்படுத்தியது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள குஷ்பு, “பிரஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் குஷ்பு மீது தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

Congressmen besieged Khushbu's house

 

அதே சமயம் குஷ்பு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் தமிழக காங்கிரஸ் சார்பில் என அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் கடந்த 24 ஆம் தேதி  மாலை ஐந்து மணிக்குள் மன்னிப்பு கேட்கா விட்டால் குஷ்புவின் வீட்டை முற்றுகையிடப் போவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதோடு தலித் மக்கள் பேசும் மொழியை வன்மம் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவு படுத்தி பேசியதாக புகார் கூறப்பட்ட நிலையில், நடிகை குஷ்புவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “நான் பேசிய வார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியினர் என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதாக சொன்னார்கள். நானும் காத்துக்கொண்டிருந்தேன். ஒருத்தரையும் காணோம்” எனத் தெரிவித்திருந்தார்.

 

Congressmen besieged Khushbu's house

 

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி எஸ். சி. துறையின் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பட்டியலின மக்களை கொச்சைப்படுத்தி பேசியதை கண்டித்து  சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்