Advertisment

“நதிநீர் பிரச்சனையில் காங்கிரஸ் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கும்” - செல்வப்பெருந்தகை

Congress will support TN govt in river water problem says Selvaperunthagai

Advertisment

தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் உப்பு சத்தியாகிரக நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. பின்னர் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை சர்தார் வேதாரத்தினம் பிள்ளையின் பேரன், வேதரத்தினப் பிள்ளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஆறுமுகம், தண்டியாத்திரை குழு தலைவர் சக்தி செல்வ கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல்.ரெக்ஸ், திருச்சி கலை, மாநிலத் துணைத் தலைவர் சுப.சோமு, மாநில பொதுச் செயலாளர்கள், வக்கீல்கள் சரவணன், இளங்கோ, தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “இந்தியாவில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு, பெண்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு சரியான பாதுகாப்பு இந்த பாஜக ஆட்சியில் இல்லை. இதுதான் பத்தாண்டு காலம் பாஜகவின் லட்சனமாகும். உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றி பிரதமர் மோடி, அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களைப் பற்றி மோடியும், தமிழக பாஜக தலைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Advertisment

பாஜக வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்தப் பார்க்கிறது. இதனை ஒரு நாளும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஜாதி, மத அரசியலை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் இன துரோகி தமிழக பாஜக தலைவர்தான். கர்நாடக எம்.பி தமிழர்களை பற்றி பேசும் பொழுது அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்? தமிழகத்தின் உரிமை எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி நிச்சயம் குரல் எழுப்பும், காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசுக்கு, காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் உரிமையை விட்டுக் கொடுக்காது. இந்தப் பாராளுமன்றத்தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும்”என்றார்.

congress karnataka Selvaperunthagai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe