
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது வீட்டின் முன்பு கட்சியினருடன் தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் திறப்பதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியையும், தமிழகத்தில் ஆளும் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியையும் கண்டித்து கருப்புபட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கரோனா நோயின் துயரத்தை விட மதுக்கடைத் திறப்பால் ஏற்படும் துயரம் மக்கள் விரோதச் செயலாகும். கேரளாவில் முழுவதும் கரோனா கட்டுபடுத்தப்பட்டுள்ளது. அங்கு டாஸ்மாக் கடைகளைத் திறக்க முயலவில்லை. ஆனால் இங்கு கரோனா தீவிரமடைந்து வருகிறது. இங்கு மது கடையைத் திறக்க எடப்பாடி அரசு துடிக்கிறது.
மோடி தலைமையிலான அரசு கூட்டாட்சித் தத்துவத்தைத் சிதைத்து வருகிறது. மோடி நிதி ஆதாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மாநிலங்களைச் சிதைத்து வருகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக உள்ள அதிமுக அரசு ஆட்சி செய்கிறது. இதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் இவர்கள் இது குறித்து மோடியிடம் எந்த ஒரு கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள். மோடியிடம் எடப்பாடி அரசு அடிமை அரசாகவே உள்ளது.
பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் ஆட்சி நடைபெறுகிறது. அந்தச் சட்டசபையில் முதல்வர் சி.ஏ.ஏ விற்கு எதிராகச் சட்டம் கொண்டு வருகிறார். ஆனால் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடியால் செய்ய முடியவில்லை. கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாகக் காவல்துறை, வருவாய்த் துறை, தூய்மைப் பணியாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகப் பணிபுரிந்து நோயைக் கட்டுக்கோப்பில் வைத்துள்ளார்கள். தற்போது மதுக்கடைகளைத் திறந்து அவர்களின் தியாகத்தை எடப்பாடி பழனிச்சாமி வீணடிக்க உள்ளார்.
இது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின், அதிகாரிகளின் தியாகத்தை வீணடிக்கும் செயலாகும். வெளிமாநிலங்களில் உள்ள கூலித் தொழிலாளர்களைத் தமிழகம் அழைத்துவர தமிழக காங்கிரஸ் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளோம். இதனை பாஜக அரசு அதற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும். மேலும் பாஜக அரசு வெளிமாநிலத் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வசூலித்தால் காங்கிரஸ் கட்சி கொடுத்த நிதியைத் திரும்பப் பெறும்" என்றார்.