
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. இன்றைய கூட்டத்தின்போது, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் எனப்படும் சி.ஏ.ஏ. சட்டத்தை ரத்து செய்யக் கோரி பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன். இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியருக்கும் எதிரானது. தலைமுறை, தலைமுறையாக இந்த மண்ணில் வாழும் நமது குடியுரிமையை நிரூபிக்கச் சொல்ல மோடி - பா.ஜ.க. அரசு யார்?
இந்த சட்டத்தினால் 20 லட்சம் இந்துக்களும், 16 லட்சம் இஸ்லாமியர்களும் அஸ்ஸாமில் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளிலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை; ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு கிடையாது. தமிழர்களுக்கு எதிரான துரோகத்தின் தொடர்ச்சி இது. இதை அனுமதிக்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.