பிரதமர் மோடி வரும் 8 ஆம் தேதி சென்னை வருவதை ஒட்டி நகரின் பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில்அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் மோடி சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.
அடுத்த நாளான ஏப்ரல் 9 ஆம் தேதி முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். இதற்காக சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தம் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் மோடி செல்லும் வழியெல்லாம் கருப்பு கொடி காட்டுவார்கள் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் ராகுல் காந்தியின் பதவியை இழக்க செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, இந்திய ஜனநாயகத்தை சிதைத்த பிரதமர் மோடியின் தமிழகம் வருகையை கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்” எனப் பதிவிட்டுள்ளார்.