
சேலத்தில் கடந்த வாரம் நடந்த மாநில அளவிலான கலைத் திருவிழாவில் தமிழ்நாடு முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சென்ற மாணவர்கள் ஓவியம், நடனம், நாட்டுப்புறக்கலைகளில் சாதித்துள்ளனர். அறந்தாங்கி அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி +2 மாணவன் ஹரிராஜ், கடந்த இரண்டு வருடங்களாக ஓவியப் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். இவர் முதல் வருடம் இரண்டாமிடமும், கடந்த வருடம் முதலிடமும் பெற்றார். அதேபோல இந்த வருடமும் கலந்துகொண்டு 3க்கு 2 அளவுள்ள சார்ட் பேப்பரில் ராமன் - சீதை கல்யாண காட்சியை வாட்டர் கலரில் வண்ணமயமாக வரைந்தபோது அனைவரின் பார்வையும் ஹரிராஜ் பக்கம் திரும்பியது. இறுதியில் முதலிடம் பெற்று பதக்கமும் சான்றிதழும் பெற்றுள்ளார்.
தொடர்ந்து தேசியப் போட்டிக்குச் செல்ல தகுதிபெற்று அதற்காக தயாராகி வருகிறார் மாணவர் ஹரிராஜ். இவர் வாழை இலையில் வரைந்த இந்திய சின்னம் புக் ஆஃப் இந்தியா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓவியத்தில் முதல் பரிசோடு ஊருக்கு வந்த ஹரிராஜை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் அழைத்துப் பாராட்டினார்கள். மேலும், சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் பாராட்டி வரவேற்று தேசியப் போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்தினார்கள். இதுகுறித்து மாணவர் ஹரிராஜ், “மூன்றுமுறை வெற்றி பெற்றேன். கடந்த முறை தேசியப் போட்டியில் தவறவிட்டதை இந்தமுறை வெற்றியோடு வருவேன்” என்றார்.