Confusion in judgment; Senthil Balaji is in trouble after getting bail

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.

Advertisment

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான வழக்கில் இன்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் சுமார் 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த வழக்கில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளாவது, 'வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும்; சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளக்கூடாது; எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும்; ரூபாய்25 லட்சத்திற்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியின் காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்பொழுது செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கிடைத்த நிபந்தனை ஜாமீன் குறித்து தெரிவித்தனர். ரூபாய்25 லட்சத்திற்கு இருநபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை குறித்து தெரிவித்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன் அமலாக்கத்துறை விசாரணை அதிகாரியிடம் உத்தரவாதம் தொடர்பானவற்றை தாக்கல் செய்யுங்கள் தெரிவித்திருக்கிறார். அதனால்குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

Advertisment

அதோடு மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்க கூடிய நிபந்தனையில் சில குழப்பங்கள் இருப்பதாகவும் நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். இதற்கான வாதங்கள் நடைபெற்று வருகிறது. இருநபர் உத்தரவாதத்தை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் சிறையில் இருந்து உடனடியாக செந்தில்பாலாஜி விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணை அதிகாரி முன்பு எப்படி பிணைத்தொகையை தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பிய செந்தில் பாலாஜி தரப்பு, இன்று வெளியே விடக்கூடாது என முடிவு செய்து விட்டதுபோல் செயல்படுகிறீர்கள். தீர்ப்பில் குழப்பம் இருப்பின் உச்ச நீதிமன்றத்தின் முறையிட்டு விளக்கம் பெறுகிறோம் என தெரிவித்தனர். தொடர்ந்து செந்தில்பாலாஜி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டநிலையில் இந்த வழக்கு சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதன்மை நீதிமன்ற நீதிபதி முழுமையான விசாரணைக்கு பிறகு உத்தரவு நகல் கொடுத்த பின்னரே புழல் சிறையில் இருந்து செந்தில்பாலாஜி வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.