கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள பூங்குணம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. அதில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி செய்து வருபவர் ராணி. இவருக்கும், அதே பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்களுக்கும் இடையே சில மாதங்களாக கருத்து மோதல் ஏற்பட்டு அது தற்போது கோஷ்டிப் பூசலாக மாறி உள்ளது.
கடந்த 10ஆம் தேதி கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு இந்தப் பள்ளி ஆசிரியர்கள் சென்றுள்ளனர். அவர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம், ‘தலைமை ஆசிரியையின் அணுகுமுறை சரியில்லை. எங்களுக்கு பள்ளியில் பாதுகாப்பு இல்லை. எனவே, எங்கள் அனைவரையும் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து விடுங்கள்’ என்று மனு அளித்துள்ளனர்.
இதற்கு மறுநாள் தலைமை ஆசிரியை ராணி தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாக கூறி அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். சிகிச்சை முடிந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி தலைமை ஆசிரியை ராணி பள்ளிக்கூடத்திற்கு பணிக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அதே பள்ளியில் ஆசிரியராகப் பணி செய்யும் தமிழ்வேந்தன் என்பவரை பள்ளிக்கு எதிரில் வசிக்கும் ஒரு மாணவியின் தந்தை, தமிழ்வேந்தனை தாக்கியுள்ளார்.
அதில் அவர் காயமடைந்துள்ளார். அவரைமீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஆசிரியர் தமிழ்வேந்தன் உட்பட ஒன்பது ஆசிரியர்கள், பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியையின் தூண்டுதலால் ஒரு மாணவியின் தந்தை ஆசிரியர் தமிழ் வேந்தனை தாக்கியுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தனர்.
காவல்துறை மற்றும் வட்டாட்சியர் ஆசிரியர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் முன்னிலையில் இதுகுறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து பதினோரு மணி அளவில் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் பணிக்கு சென்றனர்.