/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1367_0.jpg)
கைது செய்யப்பட்ட கேசவன்
லிஃப்ட் தராததால் தாக்கியவரை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஆறு மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்துள்ள மேலபாண்டியபுரம் ரயில்வே கேட் அருகே உள்ள முட்புதரில் 11 வெட்டு காயங்களுடன் சடலம் ஒன்று கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத அந்த ஆண் சடலம் யார் என மணியாச்சி காவல் நிலையபோலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாறைக்குட்டை பகுதியைச் சேர்ந்த வீரமணி என்ற இளைஞர் தலையில் வெட்டுக் காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார். வீரமணி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. வீரமணி தலையில் ஏற்பட்ட காயமும் ஜூன் 12ஆம் தேதி ரயில்வே கேட் அருகே மீட்கப்பட்ட சடலத்தின் தலையில் இருந்த காயமும் ஒரே தாக்குதல் போல் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியதில் அதே பாறைகுட்டம் பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கேசவன் கடந்த ஜூன் 12ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லிப்ட் கேட்டிருக்கிறார். ஆனால் கேசவன் லிப்ட் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கேசவன் மீது கல்லை எடுத்து வீசி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கேசவன் அரிவாளை எடுத்து வந்து, தன் மீது கல் வீசிய நபரை தாக்கி 11 முறை சரமாரியாக வெட்டிக் கொன்று ரயில்வே கேட் அருகே வீசி விட்டு சென்றுள்ளார். அதேபோல் மனநலம் பாதிக்கப்பட்ட வீரமணி என்பவரையும் கேசவன் மற்றொரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட தகராறில் வெட்டியுள்ளார்.
அந்த பகுதியில் உள்ள மக்களிடம் விசாரித்த பொழுது கேசவன் ஒரு சைக்கோ போலசுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கேசவன் கைது செய்யப்பட்டிருந்தாலும் ஆறு மாதத்திற்கு முன்பு ரயில்வே கேட் அருகே சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என விடை தெரியாமல் தவிக்கின்றனர் போலீசார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)