Advertisment

இரு பிரிவைச் சேர்ந்த திருநங்கைகள் மோதல்... பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்துவதாக புகார்!

Transgender conflict between two gangs

சேலத்தில், இரண்டு பிரிவுகளாக செயல்படும் திருநங்கைகளிடையே மோதல் அதிகரித்து, கைகலப்பு வரை சென்றுள்ளது. ஒரு பிரிவினர், மற்றொரு தரப்பு திருநங்கைகளைப் பாலியல் தொழிலுக்குக்கட்டாயப்படுத்துவதாக புகார்கள் கிளம்பியுள்ளன. சேலம் பஞ்சந்தாங்கி ஏரி, 5 சாலை, பள்ளப்பட்டி, பொன்னம்மாபேட்டை,சூரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநங்கைகள் வசிக்கின்றனர். இவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து செயல்படுகின்றனர். திங்களன்று (ஆக. 2) காலை பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், திருப்பத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

Advertisment

அப்போது, எதிர் பிரிவினரைச் சேர்ந்த 3 திருநங்கைகள் மற்றும் அவர்களுடன் வந்த ஆண் ஆகியோர் திடீரென்று பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த திருநங்கையைத் தாக்கத் தொடங்கினர். காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த திருநங்கைகள் பத்துக்கும் மேற்பட்டோர், திங்கள்கிழமை காலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அவர்கள் திடீரென்று, தாங்கள் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய்யைத் தங்கள் உடல் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.

Advertisment

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சுதாரித்துக்கொண்டு, அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேன்களைப் பறித்து வீசி எறிந்தனர். பின்னர் திருநங்கைகள், அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில், “பொன்னம்மாபேட்டையைச்சேர்ந்த திருநங்கைகள் சிலர் சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். அவர்களை, எதிர் பிரிவைச் சேர்ந்த சில திருநங்கைகள் தடுத்து நிறுத்தி, பாலியல் தொழில் செய்து மாதந்தோறும் மாமூல் கொடுக்க வேண்டும் என்றும், சொந்த ஊருக்கு யாரும் செல்லக்கூடாது என்றும் கூறி தாக்கினர்.

தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களைக் கண்டுகொள்ளாத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட திருநங்கையைப் பிடித்து வைத்துள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருநங்கைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்றனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உதவி ஆணையர் வெங்கடேசன் கூறியதை அடுத்து, திருநங்கைகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். அவர்களிடம் சேலம் நகரக் காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

collector Transgender Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe