Skip to main content

இரு சமூகத்தினரிடையே மோதல்; போலீஸ் விசாரணை! 

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

conflict between two communities; Police investigation!

 

கிருஷ்ணகிரி  மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூர் கிராமத்தில் பலதரப்பு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், பட்டியலினத்து மக்கள் சுமார் 75 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த மக்களை எப்போதும் சமூக ரீதியாக அழுத்தி வைப்பதும், கிராமத்தில் டீ கடையில் இரட்டைக் குவளை முறையைக் கடைப்பிடிப்பதும், கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதும் நடந்து வருகிறது. இவையெல்லாம், கோட்டையூர் பட்டியலினத்து மக்கள் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு பிறகே வெளியில் தெரிய வந்துள்ளது. 

 

குறிப்பாக, அங்கு உள்ள பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விருப்பப்படியே பட்டியலின மக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய கோட்டையூர் கிராமத்தின் நடைமுறை. கோட்டையூர் கிராமத்தில் அம்பேத்கர் படங்களையோ அல்லது பட்டியலினத்து தலைவர்களுடைய படங்களையோ போட்டு பேனர் வைத்தால் அதை அகற்றச் சொல்லியும் தகராறில் ஈடுபடுவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி ஜின்மநத்தம் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பட்டியலின இளைஞர்கள் அருண்குமார், முத்துராஜ் ஆகியோர் தேரின் வடக்கயிற்றைப் பிடித்துள்ளனர். அப்போது, பெரும்பான்மை சமூகப் பிரிவைச் சேர்ந்த நபர்கள் அந்த இளைஞர்களிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு நடந்ததை அருகில் இருந்த கிராமத்தைச் சேர்ந்த மரலிங்கா என்ற நபரிடம் தகவலைச் சொல்லியுள்ளனர்.

 

இதன்பிறகு வாய் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி மரலிங்கா, இளைஞர்களை அழைத்து வந்துள்ளார். ஆனாலும், ஆத்திரம் தீராத பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிவக்குமார், மோகன், அருண், ஐயனார், ராவேந்திரன், பிரபு ஆகியோர் பட்டியலின மக்கள் இருக்கும் தெருவிற்குச் சென்று மரலிங்காவிடம் தகராறு செய்துள்ளனர். இந்தத் தகராறில், மேற்கண்ட இளைஞர்கள், மரலிங்காவின் கையை கத்தியால் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இத்தகவலை ஊர் முக்கியஸ்தரிடம் புகார் தெரிவித்து நியாயம் கேட்க, பட்டியலின இளைஞர்கள், பெண்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் பெரும்பான்மை சமூகத்தினர் இருக்கும் தெருவிற்குச் சென்றுள்ளனர். அப்போது பட்டியலின மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

 

தாக்குதலில் 6 ஆண்கள் 3 பெண்கள் உட்பட 9 பேருக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருவருக்கு இரண்டு கைகள், இரண்டு கால்களையும் வெட்டி உள்ளனர். நான்கு இளைஞர்களுக்கு கடுமையான வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன. மூன்று பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்டியலின மக்கள் காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்றபோது, நீங்கள் ஏன் அந்த தெருவிற்குச் சென்றீர்கள் என்று கூறி  பட்டியலின மக்கள்  ஏழு பேர் மீது பிரிவு 307ன் கீழ் கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகளும், முற்போக்கு அமைப்புகளும் போராட்டம் நடத்தியுள்ளனர். அதன்பிறகு அந்த பெரும்பான்மையினர் மூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

 

இது குறித்து பேசிய மக்கள் அதிகாரம் கிருஷ்ணகிரி மண்டல குழு உறுப்பினர், “காவல்துறையும், நிர்வாகமும் ஒரு சார்பாக எப்போதும் செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மறுபக்கத்தில் தொடர்ந்து சாதி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் சிவக்குமார் போன்றோர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.  நீதிமன்றம் பிணை வழங்கக்கூடாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் இரட்டை டம்ளர் முறை குறித்த ஆய்வு செய்து, இரட்டை டம்ளர் வழங்கும் டீக்கடை, ஓட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Hosur Corporation Chinna Elsakhiri Ambedkar Nagar water incident

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஏலசகிரி பகுதியில் அம்பேத்கர் நகர் அமைந்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரைப் அப்பகுதி மக்கள் அருந்தியுள்ளனர். இந்தக் குடிநீரை அருந்தியவர்களுக்குக் காய்ச்சல், வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும், சிலர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். 

இதையடுத்து ஓசூர் சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர், எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இப்பகுதி மக்களுக்கு அருகில் உள்ள சாந்தபுரம் ஏரியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில்தான் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலந்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து குழாய் ஆய்வாளர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிறப்பிக்கபட்டுள்ள உத்தரவில், பணியில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் செயல்பட்டதாக ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 80 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அணை மீன்களுக்கு வந்த ஆபத்து; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
dead floating dam fish; Villagers in fear

அண்மையில் சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் இறந்தும், மயங்கிய நிலையிலும் மீன்கள் கரை ஒதுங்கியது அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியாக குறைந்துள்ள நிலையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது கோடை வெயிலின் தாக்கமா அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் உயிரிழக்கின்றனவா அல்லது வேதிப் பொருட்கள் கலந்து அதன் மூலம் ஏற்பட்ட பக்க விளைவு காரணமாக மீன்கள் உயிரிழக்கின்றனவா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கே.ஆர்.பி அணையிலும் அதேபோல மீன்கள் கொத்துக் கொத்தாக இறந்து கிடப்பது அந்தப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் துர்நாற்றம் வீசுவதால் பல்வேறு நோய் பரவும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்தப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட கே.ஆர்.பி அணையில் ஒப்பந்த முறைப்படி மீன்கள் வளர்க்கப்பட்டு பிடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் வறட்சியின் காரணமாக 38 அடிக்கு கீழ் சென்றுள்ளது. தொடர்ந்து தென்பெண்ணை மற்றும் பெங்களூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. 

இந்த சூழலில் அணையில் உள்ள அனைத்து மீன்களும் செத்து குவியல் குவியிலாக மிதப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயனங்கள் அணையில் திறந்து விடப்படுவதாக குற்றச்சாட்டு முன்னதாக எழுந்திருந்தது. ஏற்கெனவே ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கிய நீர் ஓடியது தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தது. தற்பொழுது அந்த நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக கே.ஆர்.பி அணைக்கு வந்ததால் ஏற்பட்ட ரசாயன மாற்றம்தான் மீன்கள் குவியலாக செத்து மிதக்க காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.