
திருச்சி மண்ணச்சநல்லூர் சி.ஐ.டி.யு.வின் தொழிலாளர்கள் பிரிவின் முன்னாள் தலைவர் முத்து செல்வன் (33) என்பவருக்கும் தற்போது தலைவராக இருக்கும் ராஜா சண்முகம் என்பவருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ராஜா சண்முகம், மது பாட்டிலால் அவரை தாக்கியதோடு, தன் கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்தக் காயம் அடைந்த முத்து செல்வன், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
தன் வீட்டிற்கு சென்று ராஜா சண்முகம் ரூபாய் 1.5 லட்சத்தைத் திருடியதாகவும், அதோடு தன்னை தாக்கியதாகவும் முத்து செல்வன் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் தற்போது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.