
சேலத்தில், வெல்லத்தில் கலப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 36 டன் வெள்ளை சர்க்கரையை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் திருநாளையொட்டி குண்டு வெல்லம், அச்சு வெல்லம் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, விதிகளை மீறி வெல்லம் தயாரிப்பில் செயற்கை நிறமூட்டி, சர்க்கரை சேர்க்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து தாரமங்கலம், ஓமலூர், கமலாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்ல ஆலைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். கடந்த ஒரு மாதத்தில் வெல்ல ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனையில், வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 36 டன் வெள்ளை சர்க்கரையை பறிமுதல் செய்துள்ளனர். கலப்பட வெல்லம் தயாரித்த 10 ஆலைகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், “ஆலைகளில் கலப்பட வெல்லம் தயாரிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், ஆலைகளைக் கண்காணித்து வருகிறோம். மண்டிகளுக்கு கொண்டு வரப்படும் வெல்லத்தில் இருந்து உணவுப் பகுப்பாய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், வெல்ல ஆலைகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவும் அறிவுறுத்தி உள்ளோம். இதுவரை சேலம் மாவட்டத்தில் 110 ஆலைகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. வெல்லம் தயாரிப்பில் வெள்ளை சர்க்கரை, ஹைட்ரோஸ், சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. வெல்லத்தில் யாராவது ரசாயனங்கள் கலப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.