Confirm corona infection; Neighbors who vacated houses ..!

கரோனா நோய் பரவல் நகரம், கிராமம் என பாகுபாடில்லாமல் அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் என்ற ஊரில் கரோனா நோயாளியின் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் குடும்பத்துடன் அடைக்கலம் தேடி வீட்டைவிட்டு புறப்பட்டனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் கம்பன் தெருவில்தான் நடந்துள்ளது.

Advertisment

இந்தத் தெருவில் வசிப்பவர் 70வயது சிவகுமரன். இவர், தனது குடும்பத்தினருடன் சொந்த வீட்டில் வசித்துவருகிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தகவலறிந்த சுகாதாரத்துறையினர் நேற்று முன்தினம் (24.05.2021) காலை 10 மணியளவில் சிவகுமரனைமருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸுடன் அவர் வீட்டுக்கு வந்தனர். ஆனால், சிவகுமாரனின் குடும்பத்தினர் அவரது வயதைக் காரணம் காட்டி மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்தனர். அவரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதாக கூறினார்கள். ஆனால், அங்கு அமர்ந்திருந்த சிவக்குமாரன் தொடர்ந்து இருமிக்கொண்டிருந்தார்.

Advertisment

அவரது உடல்நிலை பரிதாபமாக இருந்துள்ளது. மேலும் சிவகுமாரன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் அவ்வப்போது தெருவில் நடமாடிவருகிறார். இதனால் அச்சமடைந்த சிலர் தங்கள் வீட்டைக் காலி செய்துகொண்டு உறவினர் வீட்டிற்கு அடைக்கலம் தேடிச் சென்றுள்ளதாக அத்தெருவில் வசிக்கும் சில குடும்பத்தினர் தெரிவித்தனர். எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிப்பதன் மூலம் தெருவிலுள்ள எங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன், சிவகுமாரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்தனர். ஆனால், மருத்துவமனைக்கு வர மறுப்பு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, போலீசார், வருவாய்த்துறை சார்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிவகுமாரனின் குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறி அவரைப் பாதுகாப்பாக கொண்டுசென்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, சிவகுமாரன் தனி ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கரோனா நோயாளியை மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்ததால் கண்டாச்சிபுரம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.