
சிதம்பரம் அருகே பு.முட்லூரில் கடலூர் மாவட்டக் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்டுமான சங்க மாவட்டத் துணைத் தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் குப்புசாமி, நடராஜன் ஆகியோர் சிஐடியு கொடி மற்றும் சங்க கொடியினை ஏற்றிவைத்தனர். துணைச்செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார். கார்த்திகேயன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
கடலூர் மாவட்ட சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் பழனிவேல், மாநாட்டை துவக்கிவைத்துப் பேசினார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். வரவு - செலவு கணக்குகளைப் பொருளாளர் மனோரஞ்சிதம் வாசித்தார். மாநாட்டு தீர்மானங்களை மாவட்டத் துணைத்தலைவர் இளங்கோவன், துணைச் செயலாளர்கள் பாபு, கருணாகரன் ஆகியோர் முன்மொழிந்தனர்.
கட்டுமான தொழிலாளர் சங்க மாநில உதவிச் செயலாளர் பாலகிருஷ்ணன், சிஐடியு மாநிலக்குழு வேல்முருகன், ஜீவானந்தம், துணைச் செயலாளர் ரமேஷ்பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில துணைத் தலைவர் கருப்பையன் மாநாட்டு நிறைவுரையாற்றினார்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு எங்கு விபத்து நடந்தாலும் ரூ. 5 லட்சமும், இயற்கை மரணத்திற்கு ரூ. 1 லட்சமும், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முதல் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்; தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும்; கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.