Skip to main content

சீமானுக்கு நிபந்தனை ஜாமின்! சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகிறார்!

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
seee

 

எட்டு வழிச்சாலை, விமான நிலையம் விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதோடு, மக்களிடம் கலகத்தைத் தூண்டியதாக ஏற்கனவே ஒரு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் தினமும் காலையில் ஓமலூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று ஓமலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியிருந்தது.


இந்நிலையில், நேற்று சேலத்தை அடுத்த பூலாவாரி அருகே உள்ள கூமாங்காடு கிராமத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து சீமான் கருத்து கேட்டார். இது நீதிமன்ற நிபந்தனைகளை மீறிய செயல் எனக்கூறி, மல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்.


சீமான் மட்டுமின்றி அவருடைய கட்சியைச் சேர்ந்த யுவராஜ்குமார், தேவி, ஜெகதீசன், ஜானகி, தமிழ்ச்செல்வம், சிவக்குமார், தமிழரசன், மணி, ஆதிதீபக், அழகரசன் ஆகிய 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.   அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேவி, ஜானகி ஆகிய இரண்டு பெண்கள் தவிர மற்ற 9 பேரையும் காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 


இந்த வழக்கில் ஜாமின் கேட்டு சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 22ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் சீமான் கலந்து கொள்ள இருப்பதால், அவருக்கு உடனடியாக ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர். 


இந்த மனு இன்று (ஜூலை 19, 2018) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் மோகன்ராம், காவல்துறையினர் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். சீமானுடன் கைது செய்யப்பட்ட மற்ற நிர்வாகிகளுக்கும் ஜாமின் கிடைத்தது. இதையடுத்து சீமான் மற்றும் அவருடன் கைதான நிர்வாகிகள் நாளை மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்