iuml

ஜனநாயக மாண்புகளையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையில் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்

Advertisment

ஜனநாயகம் என்பதே ஒரு சாரார் உடன்படுவதை, மறு சாரார் உடன்படாமல் இருப்பது தான். இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கிற தூண்களில் நவீன காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறை முதன்மை பெற்று வருகிறது. அறிவு ஜீவிகள் பலரும், பத்திரிகை, ஊடகத்துறையால் தான் பல நாடுகளில் ஜனநாயகம் நிலைத்திருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisment

ஆளுநர், முதல் அமைச்சர் மற்றும் அமைச்சரவையில் உள்ளோர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகிய எல்லோர் மீதும் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருக்கின்றன. தமிழக ஆளுநர் கூட சில தினங்களுக்கு முன்பு தமிழக உயர்கல்வித்துறையைப் பற்றி பல்கலைக்கழகங்களில் உள்ளவர்கள் அவமானப்படும் அளவுக்கு சில விமர்சனங்களை வெளியிட்டு இருக்கிறார். இத்தகைய விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் அவ்வப்போது வெளியிட்டு வருகிற வாதங்களுக்கும், ஒவ்வொருவரையும் கைது செய்யத் தொடங்கிவிட்டால் இப்பொழுது பொதுவாழ்விலும், அரசுத்துறையிலும் உள்ள அனைவருமே கைது செய்யப்படக்கூடிய நிலைதான் உருவாகும்.

நக்கீரன் பத்திரிகை மறைக்கப்பட்ட பொதுநலம் தொடர்பான பல உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் தனி முத்திரை பதித்து வருகிறது. ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் துணிச்சல் மிக்கவர். எதனையும் ஆதாரப்பூர்வமாக வெளியிடுவதில் வல்லவர்.துப்புதுலக்கும் இதழியலில் முன்னோடியாக திகழ்ந்து வருபவர். நக்கீரன் கோபால் எழுப்பி இருக்கக்கூடிய வாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் மறுப்பு தெரிவித்து, தங்களது கண்டனங்களை அறிக்கைகள் மூலமாக வெளியிட்டு ஜனநாயக மரபுகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கும், அமைச்சரவைக்கும் இருக்கிறது.

Advertisment

அவர்கள் கொடுக்கும் மறுப்பு அறிக்கைகளை ‘நக்கீரன்’ இதழில் வெளியிடுமாறு வலியுறுத்தவும் அவர்களுக்கு உரிமை உண்டு. இத்தகைய ஜனநாயக மரபுகளை புறந்தள்ளிவிட்டு எமர்ஜென்ஸி காலத்தை நினைவுபடுத்தும் வகையில் பத்திரிகையாளர்களை கைது செய்வது தமிழக அரசுக்கு அழகல்ல. தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் இது. நக்கீரன் கோபால் அவர்களை உடனடியாக விடுவித்து ஜனநாயக மாண்புகளையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்கும் முறையில் தமிழக அரசு முன்வரவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வற்புறுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.