Advertisment

“இவர்கள் எல்லாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டாமா?” - ஓ.பி.எஸ் கண்டனம்

Condemnation of O.P.S  about pongal price

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் தமிழக அரசும் பங்கு கொள்ளும் வகையில், தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாகத் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

முதலில் பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்படும் எனவும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று(05/01/2024) இந்த ஆண்டும் பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பை உரிய முறையில் வழங்குவதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்களைப் பெறக் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தினை கண்காணிக்கத் தொடர்பு அலுவலர்களை நியமித்து பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் ரூ. 1000க்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி பொங்கல் பரிசை அனைவருக்கும் தர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளாதவது, “தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, பொங்கல் பரிசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதைய தி.மு.க. ஆட்சியில் இந்த நடைமுறைக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 5ஆம் தேதி அன்று முதலமைச்சரின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டில் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடிட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை நடுவு நிலைமைக்கு எதிரான செயலாகும்.

பழைய ஓய்வூதியத் திட்டம், விடுப்பினை சரண் செய்து பணமாக்குதல் என பல்வேறு சலுகைகளை அரசு ஊழியர்களும், பொதுத் துறை ஊழியர்களும் இழந்து இருக்கிறார்கள். அகவிலைப்படி உயர்வு தாமதமாக வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக கூடுதல் பணிச் சுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பொங்கல் பரிசு இல்லை என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் தங்களின் வருமானத்திற்கேற்ப வருமான வரி செலுத்துகிறார்கள். அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதே வருமான வரி உள்ளிட்ட பல வரிகளின் மூலம் தான்.

உண்மை நிலை இவ்வாறிருக்க, அரசு திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு அதன் பயனை அளிக்காதது கடும் கண்டனத்திற்குரியது. பெரிய, பெரிய தொழிலதிபர்களைத் தவிர்த்து வருமான வரி செலுத்தும் பெரும்பாலானோர் ஏழை, எளிய, நடுத்தர மக்கள்தான். கல்விக் கடன், வீட்டுக் கடன், நகைக் கடன், வாகனக் கடன் என பல கடன்களை வாங்கி, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு என பல நிதிச் சுமைகளை தாங்கி, காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களின் நிலைமையும் இதேதான். இவர்கள் எல்லாம் பாவப்பட்டவர்களா? இவர்கள் எல்லாம் மக்கள் இல்லையா ? இவர்கள் எல்லாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டாமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.

எல்லா திட்டங்களுக்கும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதுபோல், பொங்கல் பரிசு வழங்குவதிலும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து இருப்பது மக்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது. இருக்கின்ற சலுகைகளை பறிக்கும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டு இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. நடைமுறையில் இருக்கின்ற சலுகைகளை அனுபவிக்கும் வகையிலும், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கிலும், 1,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிட முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ops pongal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe