Skip to main content

என்.எல்.சியின் அலட்சியபோக்கினை வன்மையாக கண்டிக்கிறேன் -எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிக்கை

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
condemnation to NLC's  - Former Minister MRK Pannirselvam

 

திமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், திமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,


நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலையத்தின் ஆறாவது யூனிட் கொதிகலன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் நிரந்தர, இன்கோசர்வ் மற்றும்  ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கின்றது. ஏற்கனவே, இதே கொதிகலன் 2019ல் வெடித்ததில் ஒரு ஒப்பந்த தொழிலாளியின் விலைமதிக்க முடியாத உயிரை இழந்த துக்கம் தீராத நிலையில், சில மாதங்களிலேயே அதே இடத்தில் விபத்து நடப்பதென்பது நிர்வாகத்தின் அலட்சிய போக்கையே காட்டுகிறது.

 

 

condemnation to NLC's  - Former Minister MRK Pannirselvam

 

2019க்கு முன்னரும் இதே இடத்தில் விபத்து ஏற்பட்டதாக அறிகிறேன்..  தங்கள் உயிரை பணையம் வைத்து வேலைசெய்யும் தொழிலாளர்களின் நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாமல் உற்பத்தி லாபநோக்கம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, தொழிலாளர்களை  பாதுகாக்க தவறிய என்.எல்.சி  நிர்வாகத்தினை வன்மையாக கண்டிக்கிறேன். மீண்டும் இதுபோல் நடக்காமலிருப்பதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும், கொதிகலனின் தரத்தை உயர்த்துவதற்கும் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.


காயமடைந்துள்ள தொழிலாளர்கள் 1.பாவாடை, 2.சர்புதீன், 3.அன்புராஜ், 4.சண்முகம், 5.ஜெய்சங்கர், 6.பாலமுருகன், 7.மணிகண்டன் மற்றும் 8.ரஞ்சித்குமார் ஆகிய அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். மேலும், அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினாலும் பழைய நிலையில் அவர்களால் முழுமையாக செயல்படுவது கடினம் என்பதை மனதிற்கொண்டு, அதற்குரிய இழப்பீடுகளையும், சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். விபத்து ஏற்பட்டுள்ள கொதிகலனின் பராமரிப்பை முறையாக, தரமாக செய்திருந்தால் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் விபத்து ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.

 


இனியாவது லாபம், உற்பத்தி என்பதை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், பணிபுரிபவர்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு நிர்வாகம் செயல்பட வேண்டுகிறேன். அதேபோல், கரோனாவினால் ஏற்பட்டுள்ள சுகாதாரப் பேரிடர் காலத்தில், நெய்வேலி தொழிலகப் பகுதிகளை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கிருமிநாசினியை தெளிப்பதற்கும், வாழ்வாதரத்தை இழந்துள்ள மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும் வழங்கிடுமாறும் நான் ஏற்கனவே வலியுறுத்தியும், இதுநாள்வரை ஒருபிடி அரிசியை கூட இம்மக்களுக்கு வழங்க முன்வராத நெய்வேலி நிறுவனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் விபத்தில் சிக்கிய சர்புதீன் 8-ஆம் தேதி உயிரிழந்துள்ளார். மேலும் விபத்தில் சிக்கியவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஊழியர்கள் கூறுகிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்