condemn officials who did not remove encroachments on water bodies even after court orders

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம், செரியலூர், பனங்குளம் உள்பட பல கிராமங்களின் நீர் ஆதாரமாக உள்ளது பெரியாத்தாள் ஊரணி ஏரி. கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி ஆகிய மூன்று கிராமங்களை உள்ளடக்கி ஏரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியிலிருந்து நேரடி பாசனப் பரப்பு குறைவு என்றாலும் இதில் தண்ணீர் நிரைந்தால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும். கடந்த 30, 40 ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் நிரம்பாததால் நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழே சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த ஏரியில் தண்ணீர் நிரப்ப குளமங்கலம் பகுதியிலும், காட்டுப்பகுதியில் உள்ள தண்ணீரும் ஏரிக்கு வர தனித்தனி வாரிகளை ஏற்படுத்தியுள்ளனர். அதே போல அம்புலி ஆறு காட்டாற்றில் வீணாக செல்லும் தண்ணீரைக் கொண்டு ஏரியை நிரப்ப மறைந்த முதலமைச்சர் காமராஜர் கொத்தமங்கலத்தில் அணை கட்டி அங்கிருந்து தண்ணீர் வர அன்னதானக் காவேரி என்ற கால்வாயையும் உருவாக்கினார். பல வருடங்களாக இந்த கால்வாய் மராமத்து இல்லாமல் காணப்பட்டது. மழைக்காலங்களில் அம்புலி ஆற்றில் தண்ணீர் செல்லும் போது சேந்தன்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இளைஞர்களும் கால்வாயை சீரமைத்து தண்ணீர் கொண்டு வர முயற்சிகள் செய்தனர்.

Advertisment

இந்த நிலையில் தான் கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதி இளைஞர்களை இணைத்து உருவாக்கப்பட்ட ‘நீரின்றி அமையாது உலகு’ இளைஞர் அமைப்பினர் பொதுமக்களின உதவியோடு நீதிமன்றம் சென்று பெரியாத்தாள் ஊரணி ஏரி மற்றும் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பெற்றனர். ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள், கால்வாய் சீரமைப்பை கண்டு கொள்ளாததால் பொதுமக்களின் பங்களிப்போடு அன்னதானக்காவேரி கால்வாயை பொக்கலின் இயந்திரங்கள் உதவியுடன் சீரமைத்தனர்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தனது சொந்த செலவில் 2 கி.மீ கால்வாயை சீரமைத்துக் கொடுத்தார். அதனால் கடந்த ஆண்டு சில நாட்கள் அம்புலி ஆறு அணைக்கட்டிலிருந்து அன்னதானக் காவேரியில் தண்ணீர் வந்தது. அதன் பிறகு கால்வாய்க்கு தெற்கு பக்கம் உள்ள தோட்டங்கள், வீடுகளுக்கு செல்வோர் ஆங்காங்கே கால்வாயில் தடுப்புகளை ஏற்படுத்தி சென்று வருகின்றனர். மேலும் சிலர் நிரந்தரமாக தடுப்புகள் ஏற்படுத்துவதை தடுக்க கால்வாயின் தென்கரையில் சாலை வசதி செய்து கொடுத்தால் தடுப்புகளை தவிர்க்கலாம் என்று முதலமைச்சர் வரை மனு அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மழைத் தண்ணீர் வந்தால் ஏரிக்கு தண்ணீர் போகாது அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நீரின்றி அமையாது உலகு அமைப்பினரும் அத்தனை அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து இன்று காலை கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் சுற்றுவட்டார கிராம இளைஞர்கள், விவசாயிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தகவலறிந்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளை அனுப்பியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவில் உள்ளது போல அனைத்து நீர்வழிப் பாதைகளையும் அதிகாரிகள் சரி செய்வதே நிரந்தர தீர்வாகும்.