ADVERTISEMENT

ஆளுநரை எதிர்த்து ஈரோட்டில் போராட்டம்

11:36 AM Feb 05, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏழை, எளிய மாணவ, மாணவியரின் மருத்துவ கனவை முற்றிலும் சிதைக்கும் நீட் தேர்வுக்கு தமிழக்தில் விலக்கு அளிக்க வேண்டுமென பா.ஜ.க. தவிர மற்ற அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து அதற்காக போராட்டங்களையும் நடந்து வருகிறனர்.

இந்தநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு அமைந்தவுடன் தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும் அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியின் பரிந்துரையும் இணைத்து சட்டமன்ற தீர்மானம் தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்திய குடியரசு தலைவருக்கு அந்த தீர்மானத்தை தமிழக ஆளுநர் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் சட்டமன்ற தீர்மானத்தை 5 மாதமாக கிடப்பில் போட்டு வைத்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென அந்த தீர்மானத்தை சட்டமன்ற சபாநாயகருக்கே இரு நாட்களுக்கு முன்பு திருப்பி அனுப்பி விட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆளுநர் ரவிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை பல அமைப்புகள் நடத்த தொடங்கியுள்ளன.

கோபிசெட்டிபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர்மன்ற வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பு தமிழக கவர்னருக்கு எதிராக போராட்டம் செய்தார்கள்.

ஈரோட்டில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் பன்னீர்செல்வம் பார்க்கில் ஆளுநர் ரவியின் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பன்னீர்செல்வம் பார்க்கில் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் சாக்குபை, தண்ணீர் குடம் என தயாராக வைத்திருந்தனர். இதை அறிந்த தமிழ்புலிகள் கட்சியினர் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சாலையில் ஒன்று திரண்டனர். பிறகு திடீரென அவர்கள் கொண்டுவந்திருந்த ஆளுநரின் உருவப்படத்தை கிழித்ததோடு அந்த படங்களை காலணிகளால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். "வெளியேறு வெளியேறு தமிழக ஆளுநரே வெளியேறு, திரும்ப பெறு, திரும்ப பெறு, பா.ஜ.க.மோடி அரசே ஆளுநரை திரும்ப பெறு...'' என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதைத் தொடர்ந்து போலீசார் அக்கட்சியின் நிர்வாகிகளை கைது செய்து வேனில் ஏற்றி அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT