Completion of the lawsuit seeking to increase the corona tes

Advertisment

கரோனா பரிசோதனைகள் அதிகளவில் நடைபெறுவதால், பரிசோதனையை அதிகரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

திருவண்ணாமலை மாவட்டம் இருங்கல் கிராமத்தைசேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் கரோனா தொற்று முதன்முதலாக மார்ச் 7-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கண்டறியப்பட்டது முதல்,அதன் காரணமாக 144 தடை உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது வரை சுட்டிக்காட்டியுள்ளார். ஊரடங்கு உத்தரவை இரண்டாவது முறையாக நீட்டித்துள்ள மத்திய மாநில அரசுகள், கரோனா தொற்று பரிசோதனை நடத்துவதற்கான எவ்வித நடவடிக்கையையும் விரிவுபடுத்தவோ, விரைவுபடுத்தவோ இல்லை. குறிப்பாக, கரோனா தொற்றை விரைந்து கண்டுபிடிக்கக் கூடிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

குறிப்பாக ஏப்ரல் 14-ஆம் தேதி சுகாதாரத்துறை கணக்கின்படி, 48 ஆயிரத்து 440 பேர் தனிமைப்படுத்தபட்டு உள்ளதாக கூறும் நிலையில், 12 ஆயிரத்து 746 பேரிடம் மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களிடமோ, குடும்பத்தினரிடமோ கரோனா தொற்று பரிசோதனை செய்யவில்லை. இதன் காரணமாக, நாளுக்கு நாள் கரோனா தொற்று உள்ளவர்கள் அதிகரிக்கும் நிலையில் இருப்பதாகவும், அதனைகருத்தில் கொண்டு கரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்புடையவர்களுக்கு கரோனா பரிசோதனையை விரைவுபடுத்த மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisment

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. மீண்டும் இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி அனிதா சுமந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நாள் ஒன்றுக்கு 10,000 வீதம் பரிசோதனை நடைபெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனைபதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.