Advertisment

முற்றிலுமாக இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்! விடுமுறை என்பதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு! 

Completely collapsed school building

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வானதிராயபுரம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை 31 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்குப் பின்பு நவம்பர் 1ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில், தொடர்ச்சியான கனமழையால் விடுமுறை அளிக்கப்பட்ட பின்பு நவம்பர் 15 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில் இன்று அக்கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டிருந்த கான்கிரீட் கட்டிடம், பலத்த சத்தத்துடன் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. இதனைப் பார்த்த அக்கிராம மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும் இன்று தொடர் கனமழை காரணமாகக் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பெரும் உயிர்ச் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

Advertisment

Completely collapsed school building

இக்கட்டிடம் பல மாதங்களாக ஆபத்தான முறையில் இருந்ததாகவும், இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியதாகவும், ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் போனதால், கட்டிடம் இடிந்து விழுந்ததாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மழையின் காரணமாக இன்று விடுமுறை விடப்பட்டதால் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தபோதிலும் மாணவர்களுக்கும், வேறு யாருக்கும் அதிர்ஷ்டவசமாக எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

அதே சமயம் பள்ளி நாட்களில் விழுந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே குலை நடுங்குகிறது எனத்தெரிவிக்கும் கிராம மக்கள் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதேபோல் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இவ்விபத்திலும் விடுமுறை என்பதால் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe