ADVERTISEMENT

நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; கடும் போட்டியில் முதலிடம் பிடித்த கார்த்திக்

06:25 PM Jan 17, 2024 | kalaimohan

மதுரை பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

தற்போது போட்டி முடிந்த நிலையில் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். 17 காளைகளை அடக்கி அபிசித்தர் இரண்டாவது இடம் பிடித்தார். மொத்தமாக இதுவரை 78 பேர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயம் அடைந்துள்ளனர். 28 வீரர்கள், 16 காளை உரிமையாளர்கள், 27 பார்வையாளர்கள், 6 காவலர்கள், ஒரு பணியாளர் என மொத்தம் 78 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 11 பேருக்கு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 652 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதில் 194 காளைகள் வீரர்களால் பிடிக்கப்பட்டது.

முதலிடத்திற்கு கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதிச் சுற்றில் கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். கார்த்திக் கடந்த 2022ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவர் என்பதும், அபிசித்தர் 2023 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கிற்கு முதல் பரிசாக காரும், அபிசித்தருக்கு பைக்கும் பரிசளிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் திருச்சி, மேலூர் குணா என்பவரின் கட்டப்பா எனும் காளை முதல் பரிசும், மதுரை காமராஜர்புரம் வெள்ளைக்காளி என்பவரின் காளை சவுந்தர் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT